ரம்யா கிருஷ்ணனால் வெளியேற்றமா? நடந்தது என்ன?- வனிதா விஜயகுமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் நடந்தது என்ன, வெளியேறியது ஏன் என்று வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியிலிருந்து விலகினார் வனிதா விஜயகுமார். தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது.

சமூக வலைதளத்தில் பலரும் வனிதா விஜயகுமார் விலகியதற்கு ரம்யா கிருஷ்ணன்தான் காரணம் என்று கருத்து தெரிவித்து வந்தார்கள். தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ விஜய் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரம்யா கிருஷ்ணன் கடுமையாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து, வனிதா விஜயகுமார் வெளியேறுவது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது. இதனை வைத்து ரம்யா கிருஷ்ணனால் வனிதா விஜயகுமார் வெளியேறியிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்தார் வனிதா விஜயகுமார்.

அதில் 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சி குறித்துப் பலரும் கேள்வி எழுப்பியதால் வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது:

"குறை சொல்வதற்கும், புகார் சொல்வதற்கும் ஒன்றுமே இல்லை. எனக்கு உடன்பாடில்லை. எனக்குச் சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் வரைமுறைகள் வேறு, அங்கு நடக்கும் நிகழ்ச்சி வேறாக இருக்கிறது. நடனம் ஆடத் தெரிந்தவர்கள் ஒரு நிகழ்ச்சிக்குப் போவது வேறு, மற்றவர்கள் போவது வேறு. ஆனால், இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் ஜோடிகள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்கள் மட்டுமே, இதில் பங்குபெற முடியும். அதனால் தான் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அப்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் நான். 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சிக்கு நடுவராக வேறு இருந்துள்ளேன். ஆகையால், மீண்டும் போட்டியாளராக வரவில்லை. இது நடன நிகழ்ச்சி அல்ல என்று சொன்னார்கள். அனைவருக்குமே மார்க் தனித்தனியாக இருக்கும். இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. போட்டியாளர் வெளியேற்றம், விமர்சனம் எல்லாம் இருக்காது என்றார்கள்.

நீங்கள் இருப்பதை மக்கள் விரும்புவார்கள், ஆகையால் பங்கெடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆகையால், ஒப்புக்கொண்டேன். ரொம்ப யோசித்து விஜய் டிவி என்பதால் ஒப்புக் கொண்டேன். சீரியல் எதுவுமே ஒப்புக் கொள்ளவில்லை என்பதால், ஏதேனும் நிகழ்ச்சியின் மூலம் மக்களைச் சந்திக்கலாம் என்று ஒப்புக்கொண்டேன்.

உண்மையில், அந்த நிகழ்ச்சியை நடுவர்கள் பார்த்த விதம் கொஞ்சம் சீரியஸாக இருந்தது. பெரிய நடன நிகழ்ச்சி மாதிரியும், அதில் நாங்கள் போட்டியிட்டு ஜெயித்து கப்பைத் தூக்குவதற்குப் போன மாதிரியும் இருந்தது. ஆனால், அது உண்மையில்லை. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வரவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் நடந்துகொண்ட விதத்தில் எனக்கு உடன்பாடில்லை.

மற்றொருவருடன் ஒப்பிடுவது குறித்து ஏன் சொன்னேன் என்றால், அனைவருமே சிறந்த போட்டியாளர்கள் என்னும்போது ஒப்பிடலாம். ஒரு நடிகர் படத்தில் நடிக்கும்போது, அந்தப் படத்தைப் பற்றி மட்டுமே பேச முடியும். விஜய்யிடம் போய் அஜித் நடித்திருப்பதால் பிரமாதமாக நடித்திருப்பார் என்று சொல்வது சரியா?. அது சரியான முறையல்ல என்று நினைக்கிறேன். அனைவருமே அவர்களுடைய நிலையில் சிறந்த ஸ்டார்கள்தான். அனைவருக்குமே ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் நானாக இருப்பதுதான் என் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது.

ஷாரிக் பல்டி அடித்தான் என்பதற்காக சுரேஷ் சக்கரவர்த்தியும் பல்டி அடிக்க முடியுமா என்பதுதான் எனது கேள்வி. சுரேஷ் சக்கரவர்த்தி சாருக்கு பயங்கர கை வலி, அதையும் மீறி அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதைப் பற்றி யாருமே பேசவில்லை. அவர் ஒரு ஸ்டெப் தவறாக ஆடியதால், எனக்குக் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது. தவறு நடப்பது இயல்புதான். அதை எப்படிச் சொல்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.

எலிமினேஷனும் இல்லை என்பதால், கொஞ்சம் பாராட்டிவிட்டு பின்பு இப்படிச் செய்திருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால், ரொம்பவே ஊக்கம் இல்லாத வகையில் பேசியதால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். சக நடிகர்களுக்கு மத்தியில் ஒருவரை மட்டும் குறிப்பிட்டுப் பேசுவது முறையல்ல. நான், அவர், சுரேஷ் சக்கரவர்த்தி அனைவருமே நடிகர்கள்தான். அவர் வேண்டுமானால் 200 படங்கள் நடித்திருக்கலாம். அது எனக்குத் தேவையில்லாதது. ஆனால், சக நடிகர்களுக்கு மரியாதை என்பதையே விரும்பினேன். அவர் பேசியதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆகையால்தான் அவர் பெயரைக் கூட குறிப்பிடாமல் பேசுகிறேன். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை என்பதால் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்".

இவ்வாறு வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்