நடிகர் சூர்யா பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களுக்காக மக்களில் ஒருவராக இயங்கும் நட்சத்திரம் 

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவரும், தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்று ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் மதிக்கப்படுகிறவருமான சூர்யா இன்று (ஜூலை 23) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் சினிமாவுக்காக சூர்யாவாகி இன்று உலகத் தமிழர்கள் அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற பொது ஆளுமையாக உயர்ந்திருக்கிறார். பல்வேறு வகைமைகளில் புதுப் புது கதாபாத்திரங்களில் நடித்த அவருடைய திரைப்படங்களும் 'அகரம்' போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர் ஆற்றியிருக்கும் சமூகப் பணிகளும் மக்கள் பிரச்சினைகளுக்காக அதிகார வர்க்கத்தில் இருப்போரின் மக்களுக்கு ஆதரவாகத் துணிந்து குரல் கொடுப்பதும் அவரைத் தமிழ் மக்களின் மனதுக்குப் பிடித்தவராக தங்களில் ஒருவர் தங்களுக்கானவர் என்று கருதக்கூடியவராக ஆக்கியிருக்கின்றன.

மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கிய 'நேருக்கு நேர்' படத்தில் தொடங்கியது சூர்யாவின் திரைப் பயணம். அடுத்து விஜயகாந்துடன் இணைந்து நடித்த 'பெரியண்ணா', மீண்டும் வசந்த் இயக்கத்தில் 'பூவெல்லாம் கேட்டுப்பார்', விஜய்யுடன் இணை நாயகனாக நடித்த 'ஃப்ரெண்ட்ஸ்' என கவனம் ஈர்த்த படங்களில் நடித்தாலும் சூர்யாவுக்கான தனி அடையாளம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகுதான் கிடைத்தது. அதுவரை மென்மையான மனிதராக நடித்துவந்த சூர்யா இயக்குநர் பாலாவின் 'நந்தா'வில் அநீதியைக் கண்டு பொங்கியெழும் முரட்டு இளைஞனாக அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுவே சூர்யா என்னும் நடிகரின் அசலான வீச்சை அடையாளம் காண உதவியது.

அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கிய 'காக்க காக்க' படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்துக்குத் தன் கட்டுக்கோப்பான உடலமைப்பாலும் உறுதியான உடல் மொழியாலும் புதிய இலக்கணம் வகுத்தார் சூர்யா. மீண்டும் பாலாவுடன் இணைந்து 'பிதாமகன்' படத்தில் தனக்குள் அபாரமான நகைச்சுவைக் கலைஞன் இருப்பதை நிரூபித்தார். 'பேரழகன்' படத்தில் கூன் விழுந்த நபராக நடித்து கதாபாத்திரத்துக்காக உடலை வருத்திக்கொள்வதில் புதிய உச்சம் தொட்டார். மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' படத்தில் மேம்பட்ட அறிவும் அரசியல் பார்வையும் கொண்ட இளம் மாணவர் தலைவனாக சூர்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

ஏ.ஆர்.முருகதாஸின் 'கஜினி' படத்தில் அனைத்து தகவல்களையும் அரை மணி நேரத்துக்குள் மறந்திடும் குறைபாடுடைய மனிதராக அற்புதமாக நடித்தார். ஹரியுடன் இணைந்த 'ஆறு' படத்தில் சென்னை குடிசைப் பகுதியைச் சேர்ந்தவராகவும், செல்வாக்கும் சுயநலமும் மிக்க தாதாவின் விசுவாசமான அடியாளாகவும் வாழ்ந்து காட்டியிருந்தார். கெளதம் மேனனுடன் மீண்டும் இணைந்த 'வாரணம் ஆயிரம்' படத்தில் தந்தை-மகனாக நடித்தார். இள வயதில் முதியவரின் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.

கே.வி.ஆனந்துடன் கைகோத்த 'அயன்' முழுக்க முழுக்க கமர்ஷியல் விருந்தாக ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஹரியுடன் 'சிங்கம்' சீரீஸ் படங்களில் மாஸான காவல்துறை நாயகனாக கர்ஜித்து ரசிகர்களைப் பரபரக்க வைத்தார். 'மாற்றான்' படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்து அசத்தினார். விக்ரம் குமார் இயக்கிய '24' படத்தில் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரம் உட்பட மூன்று வேடங்களில் நடித்து வியக்க வைத்தார்.

கடந்த ஆண்டு ஓடிடியில் நேரடியாக வெளியான 'சூரரைப் போற்று' படத்தில் தன்னைப் போன்ற எளிய மக்களை விண்ணில் பறக்க வைக்கும் தீரா வேட்கையைக் கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையைத் திரை ஆவணமாகப் பதிவு செய்ததில் சூர்யாவின் அபாரமான உழைப்பு கண்கூடாகத் தெரிந்தது. அந்தப் படம் திரையரங்கில் வெளியாகவில்லையே என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' என்று தலைப்பிடப்பட்டுள்ள தன்னுடைய 40ஆம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை முன்வைத்து இலக்கியப் பேராளுமை சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவல் திரைப்படமாகிறது. அதில் சூர்யா நாயகனாக நடிக்கப் போகிறார். வெற்றிமாறன் போன்ற தலைசிறந்த படைப்பாளியின் இயக்கத்தில் அதுவும் ஒரு புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தில் சூர்யா போன்ற கதைக்காகவும் கதாபாத்திரத்துக்காகவும் உச்சகட்ட மெனக்கெடலைக் கொடுக்கும் சூர்யா போன்ற நடிகர் நடிக்கப்போவது தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

வெகுஜன சினிமாவில் தோல்வியைச் சந்திக்காத கலைஞரே இருக்க முடியாது. சூர்யாவும் அதற்கு விதிவிலக்கல்ல. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அவருடைய சில படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. ஆனால், அந்தப் படங்களிலும் சூர்யாவின் பங்களிப்பு ரசிகர்களை ஈர்க்கத் தவறியதில்லை. பெரும் ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட நட்சத்திர நடிகராக உயர்ந்துவிட்ட பிறகும் சூர்யா எல்லா விதமான கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். இதனால் பல நல்ல கதைகளுக்குப் பெரிய சந்தை சாத்தியமாகிறது.

மணிரத்னம் தயாரிப்பில் ஆகஸ்ட் 6 அன்று ஓடிடியில் நேரடியாக வெளியாகவிருக்கும் 'நவரசா' ஆந்தாலஜியில் ஒரு கதையில் நாயகனாக நடித்திருக்கிறார் சூர்யா. அவருடைய இருப்பு, கோவிட் பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளால் நலிவடைந்த திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான இந்த முயற்சிக்கு இன்னும் பெரிய சந்தையைக் கவனத்தை ஈர்த்துத் தருகிறது.

தன்னுடைய 2டி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களைத் தயாரித்தும் விநியோகித்துவருகிறார் சூர்யா. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தான் தயாரித்த படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிடும் துணிச்சல் அவருக்கு இருந்தது. இதற்காக வந்த எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தமிழ் சினிமாவுக்கான புதிய வணிக சாத்தியங்களை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடியாகத் திகழ்கிறார் சூர்யா.

சினிமாவுக்குப் பல நன்மைகளைச் செய்திருப்பதைப் போலவே சமூகத்துக்கும் தொடர்ந்து தொண்டாற்றிவருகிறார். அவர் தொடங்கி நடத்திவரும் 'அகரம்' நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் கல்விக் கனவுகளை நனவாக்கியிருக்கிறது. நிதியுதவியோடு நிற்காமல் கல்வியாளர்களையும் கல்விச் செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கி அனைவருக்கும் கல்வி சென்றடைவதை உறுதி செய்வதற்கும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குமான ஒரு இயக்கமாக 'அகரம்' தன்னுடைய பணிகளை முன்னெடுத்துவருகிறது.

நீட் தேர்வு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை, திரைப்பட தணிக்கை சட்டத் திருத்த மசோதா என மக்களுக்கும் மக்களாட்சிக்கும் எதிரானவை என்று விமர்சிக்கப்படும் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுக்கும் நட்சத்திர நடிகர் சூர்யா மட்டுமே. பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ள காலத்தில் எதைப் பற்றியும் அச்சப்படாமல் மக்கள் நலனுக்காகக் குரலெழுப்பும் சூர்யா மக்களுக்கு மேலும் நெருக்கமானவராகியிருக்கிறார்.

திரையிலும் திரைக்கு வெளியிலும் தொடர்ந்து சிறந்த பங்களிப்புகளை ஆற்றிவரும் சூர்யாவின் பயணம் இன்னும் பல வெற்றிகளையும் புதிய உயரங்களையும் அடைய மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE