யோகி பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: நடிப்பிலும் நகைச்சுவையிலும் ஜொலிக்கும் நட்சத்திரம் 

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களின் பெருமைமிகு பாரம்பரியத்தில் இடம்பெறத்தக்க நடிகரான யோகி பாபு இன்று (ஜூலை 22) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நகைச்சுவை நிகழ்ச்சியில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதோடு ஒருசில காட்சிகளில் தோன்றியிருக்கிறார் பாபு. அதன் பிறகு 2009இல் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் நாயகனாக நடித்து வெளியான 'யோகி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் தடம் பதித்தார். அதில் ஒரு சிறிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார். அந்தப் படமே அவருடைய அடையாளமாகி பெயரின் முன்னொட்டாகவும் சேர்ந்துகொண்டது.

தொடர்ந்து 'பையா', 'கலகலப்பு', 'அட்டகத்தி', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'சூது கவ்வும்', 'வீரம்', 'மான் கராத்தே', 'அரண்மனை', 'யாமிருக்க பயமே', 'ஐ' எனப் பல படங்களில் ஒருசில நகைச்சுவைக் காட்சிகளில் வந்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். 2015இல் வெளியாகி சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்ற இயக்குநர் மணிகண்டனின் 'காக்கா முட்டை' திரைப்படத்தில் 'எனக்கே விபூதி அடிக்க பாத்தீல்ல' என்கிற வசனத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார் யோகி பாபு. அடுத்ததாக மணிகண்டன் இயக்கிய 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நாயகன் விஜய் சேதுபதியின் நண்பனாக முக்கியமான கதாபாத்திரத்தில் தன்னால் நகைச்சுவையைத் தாண்டிய நடிப்பிலும் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்று நிரூபித்தார்.

2016இல் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களான சிவகார்த்திகேயனின் 'ரெமோ', சிபிராஜுடன் 'ஜாக்சன் துரை' உள்பட 15 திரைப்படங்களில் நடித்தார். 2017இல் 20 படங்களில் நடித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் விஜய்யுடன் 'மெர்சல்', அஜித்துடன் 'விஸ்வாசம்', ரஜினிகாந்துடன் 'தர்பார்' என முதல்நிலை நட்சத்திரங்களின் படங்களில் முதன்மை நகைச்சுவை நடிகராக நடிக்கும் அளவுக்கு யோகி பாபு உயரங்களை அடைந்தார்.

மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவைக் காதலிப்பவராக நடித்தார். அதில் தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக இவர் நடனமாடிக்கொண்டே பாடுவதுபோல் ஒரு முழுமையான தனிப் பாடல் வைக்கும் அளவுக்கு அந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். பொதுவாக வெகுஜன சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்குத் தனிப் பாடல் வைக்கப்படுவது அவர்களின் பிரபல்யம் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கான அடையாளம்.

2018இல் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகனின் உயிர் நண்பனாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார் யோகி பாபு. 2019இன் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான 'கோமாளி' படத்திலும் நாயகனின் நண்பனாகவும் அவருடைய குடும்பத்தின் பாதுகாவலனாகவும் நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்து வகையான நடிப்பிலும் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றார்.

'தர்மபிரபு' படத்தில் யமதர்மனின் வாரிசாக கதையின் நாயகனாக ரசிகர்களைக் கவரும் வகையில் நடித்திருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓடிடியில் வெளியாகி விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட 'மண்டேலா' என்னும் அரசியல் பகடி படத்தில் ஒரு கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்கப்பட்ட சிகை திருத்தும் தொழிலாளியாக கதையின் மையக் கதாபாத்திரத்தில் யோகி பாபுவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. அடுத்ததாக மாரி செல்வராஜின் இரண்டாம் திரைப்படமான 'கர்ணன்'இல் சற்று எதிர்மறை குணாம்சங்கள் நிரம்பிய கதாபாத்திரத்திலும் குறையற்ற நடிப்பைத் தந்திருந்தார்.

யோகி பாபு நடித்து வெளியீட்டுக்குக் காத்திருக்கும்/ நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் பட்டியலில், சுந்தர்.சியின் 'அரண்மனை 3', அஜித்துடன் 'வலிமை', விஜய்யுடன் 'பீஸ்ட்', சிவகார்த்திகேயனுடன் 'டாக்டர்', 'அயலான்' என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் நிரம்பியுள்ளன. இதோடு மணிரத்னம் தயாரிப்பில் ஆகஸ்ட் 6 அன்று ஓடிடியில் வெளியாகவிருக்கும் 'நவரஸா' ஆந்தாலஜி திரைப்படத்தில் ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் 'சம்மர் ஆஃப் 92' என்னும் கதையில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள், வளர்ந்துவரும் நடிகர்களுடன் சிறு பட்ஜெட், மீடியம் பட்ஜெட் படங்கள், இடையிடையே நகைச்சுவையைத் தாண்டிய குணச்சித்திர நடிப்பைக் கோரும் படங்கள், கதையின் நாயகனாக நடிக்கும் படங்கள், கவனத்தை ஈர்க்கும் ஓடிடி முயற்சிகள் என யோகி பாபுவை நாடிவரும் வாய்ப்புகளின் எண்ணிக்கையும், மதிப்பும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ரசிகர்கள், திரைத்துறையினரிடையே அவருடைய புகழும் மரியாதையும் அதிகரித்துக்கொண்டே இருப்பதற்கான சான்று இது.

யோகி பாபு மேன்மேலும் பல சிறந்த படங்களில் நடித்து விருதுகள் பலவற்றைக் குவித்துத் திரைத் துறையில் நீண்ட நெடிய வெற்றிப் பயணத்தை மேற்கொள்ள இந்தப் பிறந்த நாளில் மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE