முதல் பார்வை: சார்பட்டா பரம்பரை

By செய்திப்பிரிவு

வடசென்னையில் நிறைய பாக்ஸிங் பரம்பரைகள் உள்ளன. இதில் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் பல காலமாகப் போட்டி இருக்கிறது. கடைசியில் ஒரு போட்டி, அதில் யார் ஜெயிக்கிறார் என்று பார்த்துக் கொள்வோம். அதில் தோற்றுவிட்டால் சார்பட்டா பரம்பரை இனி சண்டையே போடாது என்று போட்டிக்கு ஒப்புக்கொண்டு வருகிறார் பசுபதி. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே 'சார்பட்டா பரம்பரை'.

நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அனைவருமே மனதில் பதிவது ஏதேனும் ஒரு சில படங்களில்தான் நடக்கும். அது இந்தப் படத்தில் சரியாக அமைந்துள்ளது. கபிலன் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார் ஆர்யா. அவருடைய திரையுலக வாழ்வில் சிறந்த படங்களில் ஒன்று என்று சொல்லலாம்.

பசுபதியும், ஜான் விஜய்யும் படத்தின் அடுத்த நாயகர்கள். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த பசுபதிக்கு, இந்தப் படம் ஃபுல் மீல்ஸ் மாதிரி. தனது நடிப்புத் திறமையைக் காட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வந்த ஜான் விஜய்க்கு இந்தப் படம் அருமையாகக் கைகொடுத்துள்ளது. பல காட்சிகளில் என்ன நடிப்புடா என்று பாராட்ட வைத்துள்ளார்.

பசுபதி பையனாக வரும் கலையரசன், அவருடைய ஜோடி சஞ்சிதா, ஆர்யாவின் ஜோடி துஷாரா, ஆர்யாவின் அம்மா அனுபமா குமார், பசுபதியின் இன்னொரு நம்பிக்கைக்குரிய சிஷ்யன் சந்தோஷ் பிரதாப், அவருடைய மாமா வேட்டை முத்துக்குமார், டான்ஸிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ள ஷபீர், பாக்ஸிங் மேட்ச்சுகள் மூலமாகவே சம்பாதிக்கும் காளி வெங்கட், பாக்ஸிங் கமெண்ட்ரியில் குரல் மூலமாகவே நமது மனதில் நிற்கும் பழைய ஜோக் தங்கதுரை, மாஞ்சா கண்ணனாக நடித்துள்ள மாறன், பீடி ராயப்பன் கதாபாத்திரம், காவி உடையில் பட்டை அடித்துக் கொண்டு பசுபதியுடன் வரும் கதாபாத்திரம் என இந்தப் படத்தில் நடிகர்களாகத் தெரியவில்லை. அந்தந்த கதாபாத்திரங்களாக மனதில் பதிந்துள்ளார்கள்.

இந்தப் படத்தை திரையரங்கில் காண முடியவில்லையே என்ற ஏக்கத்தை உருவாக்குகிறது 'சார்பட்டா பரம்பரை'. ஒளிப்பதிவாளர் முரளி, எடிட்டர் செல்வா, சந்தோஷ் நாராயணன் இசை, ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம், சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ், சவுண்ட் டிசைனர் ஆண்டனி ரூபன், கலை இயக்குநர் ராமலிங்கம், கலரிஸ்ட், தயாரிப்பு வடிவமைப்பு என்று அனைவருமே படத்தின் கதைக்களத்துக்கு அபாரமான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எப்படி ஜெயிக்கிறார்கள் என்ற சின்ன கதை தான் 'சார்பட்டா பரம்பரை'. ஆனால், அதன் களம், காலம், கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு ஒரு சிறப்பான சினிமா அனுபவத்தைக் கொடுத்துள்ளார் பா.இரஞ்சித். அவரோடு சேர்ந்து திரைக்கதை அமைத்துள்ள தமிழ்ப்பிரபாவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

படத்தின் கதையோட்டத்தில் அந்த ஏரியாவில் நடக்கும் சம்பவங்களைப் பக்கத்திலிருந்து பார்க்கிற மாதிரியான எண்ணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நிஜம், அந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் ரத்தமும் சதையுமாகக் கண் முன்னாடி இருக்கிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. எமர்ஜன்சி காலகட்டம், அப்போதைய அரசியல் நிலவரம், மக்களிடம் இருந்த கட்சி விசுவாசம் என நிஜ சம்பவங்களையும் கதைக்குள் கொண்டுவந்து படத்துக்குச் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்துடன் ஆர்யா சண்டையிடும் முதல் ஒன்னே கால் மணி நேரத்தையே தனிப்படமாக எடுத்து, மிச்சக் கதையை 2-ம் பாகம் என்று வெளியிட்டு இருக்கலாம். அந்த அளவுக்கு ஒரு மணி நேரம் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. இதிலேயே படம் முடிந்துவிட்டதே, இதற்குப் பிறகு என்னவென்று யோசிக்கும் போது நாயகனின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுவது என கதை நகரும் போது சுவாரசியம் பெரிதாகக் குறையவில்லை. டான்ஸிங் ரோஸாக நடித்துள்ள ஷபீர் அதகளம் செய்துள்ளார். அந்த சண்டைக்காட்சி, அதற்கான பில்டப், அந்த சண்டைக் காட்சி நடக்கக் காரணமான களம் என நடக்கும் விஷயங்கள் எல்லாம் பார்க்கும் போது 'மெட்ராஸ்' எடுத்த இரஞ்சித் திரும்ப வந்துவிட்டார் என்று சொல்லலாம்.

பா.இரஞ்சித்தின் முந்தைய படங்களில் இருந்த பிரச்சார நெடி இதில் சுத்தமாக இல்லை. சாதிப் பிரச்சினையோ, வர்க்க ரீதியான பிரச்சினையோ, கருத்தோ, குறியீடோ எல்லாமே கதைக்குள் வந்துப் போகுது. பரம்பரையோட எதுக்குடா மானத்தைக் கொண்டுவந்து சேர்க்கறீங்கன்ற ஒரு வசனத்தையே சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எது காரணமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

கதையில் புதிதாக ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்க்கிறவர்களுக்கு இது பெரிய திருப்தியைத் தராமல் போகலாம். அடுத்து ஆர்யாவுக்கு பாக்ஸிங் வரும் என்று பசுபதி தெரிந்துகொள்ளும் இடம் (எம்.குமரன்), கார்டை இறக்கு நாக்கவுட் பண்ணும் போது (இறுதிச்சுற்று) என இந்தக் களத்தில் வந்த சில படங்களின் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. ஒரு முக்கியமான காட்சி 'பரியேறும் பெருமாள்' படத்தையும் ஞாபகப்படுத்துகிறது.

அடுத்து நாயகி கதாபாத்திரத்துக்குக் கதையில் முக்கியத்துவம் இருந்தாலும் 'மெட்ராஸ்' கத்ரீன் தெரசா, 'கபாலி' ராதிகா ஆப்தே என்று ரஞ்சித்தின் முந்தைய படங்களின் நாயகிகள் மனதில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக நகரும் கதை இரண்டாவது மணி நேரத்தில் வெறும் டிராமாவாக மாறும்போது படத்தின் விறுவிறுப்பு குறைகிறது. கடைசி அரை மணி நேரத்தில் விறுவிறுப்பு கூடினாலும் முதல் பாதியிலிருந்த சுவாரசியம் அளவுக்கு இல்லை. அதற்கு முடிவு என்ன என்பது தெரிந்து கதை நகர்வது ஒரு காரணமாக இருக்கலாம்.

மொத்தத்தில் இந்த 'சார்பட்டா பரம்பரை' படத்தில் எப்படி ஆர்யா தனது கதாபாத்திரத்தின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு சண்டைக்கு தயார் ஆகிறாரோ, அதே போல் இரஞ்சித் தனது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள படம். திரையரங்கில் பார்க்க முடியவில்லையே என்பதில் வருத்தம்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE