அருள்நிதி பிறந்த நாள் ஸ்பெஷல்: தரத்தையும் புதுமையையும் முதன்மைப்படுத்தும் நாயகன் 

By ச.கோபாலகிருஷ்ணன்

வெகுஜன சினிமாவில் கதாநாயகராக நடிக்கும் வாய்ப்பைப் பெறுவதே மிகவும் கடினம். அதைவிடக் கடினமானது ஒரு நாயக நடிகராக நிலையான இடத்தைப் பெற்று நீடித்து நிற்பது. தன்னுடைய தனித்துவமான அணுகுமுறையால் இந்தச் சவாலை வென்று கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் மனங்களில் நற்பெயருடன் நிலைத்து நிற்கும் நாயக நடிகர்களில் ஒருவரான அருள்நிதி இன்று (ஜூலை 21) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேரனான அருள்நிதி, பாண்டிராஜ் இயக்கிய 'வம்சம்' படத்தின் நாயகனாகத் தமிழ் சினிமாவில் முதல் தடம் பதித்தார். அடுத்ததாக 'உதயன்' படத்தில் நகர்ப்புற இளைஞனாக நடித்தார். அருள்நிதிக்குத் தனி அடையாளம் பெற்றுக்கொடுத்தது சாந்தகுமார் இயக்கிய 'மெளனகுரு'. காவல்துறை ஊழல்களை அம்பலப்படுத்திய இந்தப் படத்தில் பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்படும் இளைஞராக நிதானமான முதிர்ச்சியான நடிப்பை அளித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார் அருள்நிதி.

'மெளனகுரு' படத்துக்குக் கிடைத்த வரவேற்பும் பாராட்டு மழையும் அருள்நிதி தன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைந்தன. அதன் பிறகு ஒரே வட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் வெவ்வேறு வகையான கதைக்களங்கள், புதுமையான கதைக்கருக்களைக் கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மாஸ் படங்கள், பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து முதல்நிலை நட்சத்திரமாகும் போட்டிக்குச் செல்லவே இல்லை.

மாறாகத் தரமான வித்தியாசமான சிறு பட்ஜெட், நடுத்தர பட்ஜெட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அதைத் தொடர்ந்து அருள்நிதி நடித்த படங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் புதுமையான கதைக்களத்தைக் கொண்ட வித்தியாசமான படங்களாக இருந்தன. கிராமம், நகரம், சிறுநகரப் பின்னணி, ஹாரர், த்ரில்லர், ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல் எனப் பல வகைமைகளைச் சேர்ந்த படங்களில் நடித்தார்.

2015இல் வெளியான 'டிமான்ட்டி காலனி' புதுமையான உள்ளடக்கம் அபாரமான உருவாக்கத் தரத்துடன் முழுக்க முழுக்க திகிலடையச் செய்த தரமான பேய்ப்படமாக இருந்தது. விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு அந்த ஆண்டில் மிக அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்றானது.

அறிவழகனின் 'ஆறாது சினம்', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கே-13' போன்ற வித்தியாசமான கதையும், சுவாரஸ்யமான திரைக்கதையும் கொண்ட த்ரில்லர் படங்களில் நடித்தார் அருள்நிதி. இவற்றுக்கிடையில் இயக்குநர் ராதாமோகனின் 'பிருந்தாவனம்' படத்தில் எளிய பின்னணியைக் கொண்ட வாய்பேசமுடியாத இளைஞனாகச் சிறப்பாக நடித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான 'களத்தில் சந்திப்போம்' படத்தில் ஜீவாவுடன் இணை நாயகனாக கோபக்கார இளைஞராக சிறப்பாக நடித்திருந்தார். இரண்டு நாயகர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை, நட்பு சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி வெகுஜன கேளிக்கை படங்களிலும் தன்னால் சிறப்பாகப் பங்காற்ற முடியும் என்று நிரூபித்திருந்தார்.

தற்போது 'டைரி', 'D ப்ளாக்', 'தேஜாவு' உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அருள்நிதி. இவை ஒவ்வொன்றும் புதுமுக இயக்குநர்களின் படங்கள், வெவ்வேறு வகைமையைச் சேர்ந்தவை.

புதுமையையும் தரத்தையும் முதன்மைப்படுத்தும் இளம் நாயக நடிகரான அருள்நிதி இன்னும் பல படங்களில் நடித்து மேலும் பல வெற்றிகளையும் அதிக புகழையும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடத்தையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE