'சத்ரபதி' இந்தி ரீமேக் படப்பிடிப்பு நாளை தொடக்கம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் இந்தியில் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜூலை 16) பூஜையுடன் தொடங்குகிறது. இது பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சத்ரபதி' தெலுங்குப் படத்தின் ரீமேக் ஆகும்.

'சென்ன கேசவ ரெட்டி', 'பாடிகார்ட்', 'கந்திரீகா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் சாய் ஸ்ரீனிவாஸ். இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருபவர். தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ராட்சசன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடித்திருந்தார். அதுவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தியில் நாயகனாக அறிமுகமாக இவர் கடந்த வருடம் பல கதைகளைக் கேட்டுவந்தார். கடைசியில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'சத்ரபதி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் சாய் ஸ்ரீனிவாஸ் நடிப்பது இறுதியானது. கடந்த வருடமே இதுகுறித்துச் செய்திகள் வந்திருந்தன.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து, படத்தைத் தயாரிக்கும் பென் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. 'பாகுபலி', 'பஜ்ரங்கி பைஜான்' உள்ளிட்ட படங்களின் கதாசிரியர், இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இந்தி ரீமேக்குக்கும் கதாசிரியராகப் பணியாற்றுகிறார். வி.வி.விநாயக் இயக்குகிறார்.

'அல்லுடு சீனு' திரைப்படம் மூலம் சாய் ஸ்ரீனிவாஸைத் தெலுங்கில் நாயகனாக அறிமுகப்படுத்திய வி.வி.விநாயக்கே, இந்தியிலும் நாயகனாக அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE