’தெய்வத்திருமகள்’ வெளியாகி 10 ஆண்டுகள்: குழந்தைத் தந்தையும் தெய்வக் குழந்தையும்

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் எந்த விதமான கதாபாத்திரத்தையும் வெகு சிறப்பாகவும் தனித்துவத்தோடும் நடித்துவிடக்கூடிய திறமைவாய்ந்த நாயக நடிகர்களில் ஒருவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக எந்த அளவுக்கு தன் உடலை வருத்திக்கொள்வார், உடலின் ஒவ்வொரு அங்குலமும் கதாபாத்திரமாகத் தெரிவதற்காக எவ்வளவு மெனக்கெடுவார் என்பது திரைப்பட ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்.

‘சேது’, ‘காசி’, ’பிதாமகன்’, ‘அந்நியன்’ என விக்ரம் தன்னுடைய கதாபாத்திரத் தேர்வாலும் கதாபாத்திரத்துக்கான உருமாற்றத்தாலும் நடிப்பாலும் ரசிகர்களைப் பெருவியப்பில் ஆழ்த்திய திரைப்படங்களின் பட்டியல் நீள்கிறது. அதில் இடம்பெறத்தக்க மற்றுமொரு படமான ‘தெய்வத் திருமகள்’ வெளியாகி இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. (2011 ஜூலை 15 அன்று ‘தெய்வத் திருமகள் வெளியானது).

’கிரீடம்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராசப்பட்டினம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் விஜய், விக்ரமுடன் இணைந்த முதல் படம் இது. அதற்கு முந்தைய ஆண்டு வெளியான ‘மதராசப்பட்டினம்’ படத்தில் காதலை மையப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தில் தந்தை-மகள் பாசத்தை மையப்படுத்தியிருந்தார். இரண்டு படங்களுமே மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றதோடு விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டன.

‘தமிழ் சினிமாவில் தந்தை-மகள் பாசத்தை முன்னிறுத்திய எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப் படத்தில் மகள், தந்தை இருவருமே குழந்தைகள் என்பதே இந்தப் படத்தின் புதுமையும் தனித்துவமும். ஆம், இந்தப் படத்தில் ஐந்து வயதுக் குழந்தையின் மனவளர்ச்சியைக் கொண்டவராக நடித்திருந்தார் விக்ரம்.

பல படங்களில் அடித்து நொறுக்கும் ஆக்‌ஷன் ஹீரோவாகவும், காதல் மன்னனாகவும் நடித்திருந்த விக்ரம் இந்தப் படத்தில் மனதளவில் ஐந்து வயதுக் குழந்தை என்பதை ரசிகர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கண்களை வைத்துக்கொள்ளும் விதத்திலிருந்து உடல்மொழி, உருவ வெளிப்பாடு, வசன உச்சரிப்பு என அனைத்தையும் கச்சிதமாகக் கொண்டுவந்திருந்தார் அவருடைய ஐந்து வயது மகளாக பேபி சாரா திரைத்துறைக்கு அறிமுகமானார்.

விக்ரம் அளவுக்கு சாராவின் கதாபாத்திரம் சமமான முக்கியத்துவம் வாய்ந்த, சமமான பாராட்டுகளைப் பெறும் வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார் சாரா.

தாயில்லாத குழந்தை, வயதுக்கேற்ற மனவளர்ச்சி இல்லாத தந்தையுடன் வளரக் கூடாது என்று குழந்தையைப் பறித்துக்கொள்கிறது விக்ரமின் மனைவியின் குடும்பம். அதை எதிர்த்து விக்ரம் நிகழ்த்தும் சட்டப் போராட்டமும் அதற்கு போதிய அனுபவமில்லாத வழக்கறிஞரான அனுஷ்கா எப்படி உதவுகிறார் என்பதும்தான் படத்தின் பெரும்பகுதிக் கதை. இதில் குழந்தைகள் மட்டுமல்லாமல் குழந்தை போன்ற கள்ளம் கபடமற்ற மனம் கொண்டவர்களின் உலகத்துக்குள் நம்மை அழைத்துச் சென்று ஒரு உணர்வுபூர்வமான பயணத்தை நிகழ்த்திக் காட்டிவிடுவார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் பாசப் பிணைப்புக்கும் அதன் எதிர்கால நலனுக்கும் இடையிலான முரண்தான் கதையின் மைய முடிச்சு. அந்த முரண் நிதானத்துடனும், முதிர்ச்சியுடனும் கையாளப்பட்டிருக்கும். இறுதியில் பாசத்தின் பிரதிநிதியான தந்தையே குழந்தையின் எதிர்கால நலனுக்கான தியாகத்தைத் தானாக முன்வந்து செய்வதுபோல் காண்பித்தது அனைவரையும் நெகிழவைத்தது.

குழந்தை யாருடன் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான இறுதி விசாரணைக் காட்சியில் வழக்கறிஞர்கள் தீவிரமாக வாத பிரதிவாதங்களை மேற்கொண்டிருக்க, சட்டத்தால் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் தந்தையும் மகளும் தொலைவிலிருந்தபடி கண்களாலும் செய்கைகளாலும் பாசத்தைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியை எப்போது பார்த்தாலும் கண்கள் ஈரமாகிவிடும்.

இதுபோன்ற பாசப் பிணைப்பு சார்ந்த சென்டிமென்ட் மட்டுமல்லாமல் நகைச்சுவைக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து ஒரு கலகலப்பான திரைக்கதையை அமைத்திருப்பார் விஜய். நீதிமன்றக் காட்சிகளும் நீதி விசாரணையின் பின்னணியில் சாட்சியங்களைத் திரட்டுவதற்காக வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் தகிடுதத்தங்களையும் சுவாரஸ்யமான காட்சிகளாகத் திரையில் விரியும் படமாக இருந்தது.

வழக்கறிஞர் அனுஷ்காவின் ஜூனியராக சந்தானத்தின் நகைச்சுவை படத்துக்குப் பக்கபலமாக அமைந்திருந்தது. விக்ரம் மீதான அனுஷ்காவின் பரிவுணர்வு காதலாக முகிழ்வதும் முதிர்ச்சியுடன் கையாளப்பட்டிருக்கும்.

குழந்தையின் சித்தியாக அமலாபால், தாய்வழிப் பாட்டனாராக சச்சின் கடேகர், அவர்கள் தரப்பில் வாதாடும் செல்வாக்கு மிக்க வழக்கறிஞராக நாசர் என முதன்மைத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர்கள் சிறப்பான நடிப்பைத் தந்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் செவிகளுக்கும் மனதுக்கும் நிறைவளித்தன. சைந்தவி குரலில் அமைந்த ’விழிகளில் ஒரு வானவில்’ என்னும் பாடல் மனதை வருடும் மென்மெலடி. ’கத சொல்ல போறேன்’ , ‘ப பபா பா’ என இரண்டு பாடல்களை விக்ரம் தன் சொந்தக் குரலில் பாடியிருந்தார். படத்தின் உணர்வுபூர்வமான கதைக்குப் பின்னணி இசையால் உச்சகட்ட நியாயம் செய்தார் ஜி.வி.பிரகாஷ். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஊட்டியையும் சென்னையையும் இயற்கையான ஒளிகளுடனும் இயல்பான வண்ணங்களுடனும் காட்சிப்படுத்தியிருந்தது.

பிறவிக் குறைபாட்டைக் கொண்ட முதன்மைக் கதாபாத்திரத்தைக் கொண்டு அப்படிப்பட்டவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக அவர்களின் நிபந்தனையற்ற அன்புள்ளம் மீதும் சுயசார்பின் மீதும் மரியாதையும் மேன்மையான உணர்வும் ஏற்படும்படியாக உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் ‘தெய்வத் திருமகள்’ ஒரு தவிர்க்கமுடியாத இடத்தைப் பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE