பெல் பாட்டம் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்

By செய்திப்பிரிவு

ஜூலை 27ஆம் தேதி வெளியாகவிருந்த 'பெல் பாட்டம்' திரைப்படத்தை மீண்டும் ஒத்திவைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் 'பெல் பாட்டம்'. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா முதல் அலையின்போது லண்டனில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு.

இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரித்துள்ளனர். அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், திரையரங்குகளைத் திறப்பதில் தாமதமாவதால் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. ஆனால், கரோனா தொற்றுப் பரவல் குறைந்து திரையரங்குகள் திறக்கும் சூழல் உருவானதால், வரும் ஜூலை 27-ம் தேதி 'பெல் பாட்டம்' படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறைந்திருந்தாலும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கரோனா தொற்று குறையாமல் இருந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு 'பெல் பாட்டம்' படத்தின் வெளியீட்டை மீண்டும் ஒத்திவைக்கப் படக்குழுவினர் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முஹர்ரம் பண்டிகை அல்லது ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு 'பெல் பாட்டம்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE