வசூல் சாதனை படைத்த 'ப்ளாக் விடோ': ஓடிடி தளத்திலும் சிறப்பான வரவேற்பு

By செய்திப்பிரிவு

சூப்பர் ஹீரோ திரைப்படமான 'ப்ளாக் விடோ', வெளியான முதல் வார இறுதியில் 80 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து தொற்றுக் காலத்தில் வெளியான படங்களில் அதிக வசூல் என்கிற புதிய சாதனையைப் படைத்தது.

கடந்த வருடம் மே மாதம் வெளியாகவிருந்த படம் 'ப்ளாக் விடோ'. கோவிட்-19 நெருக்கடி காரணமாகப் பல முறை வெளியீடு தள்ளிப் போடப்பட்டது. ஒரு கட்டத்தில் நேரடியாக ஓடிடியில் மட்டுமே வெளியாகும் என்றும் கூறப்பட்டது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட்-19 நெருக்கடி குறைந்து, திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் (ஜூலை 9) 'ப்ளாக் விடோ' படம் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நாடுகளில் மட்டும் வெளியானது. மேலும், அதே நாளில் குறிப்பிட்ட சில நாடுகளில் டிஸ்னி+ ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியான முதல் மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படம் இதுதான்.

முதல் மூன்று நாட்களில் அமெரிக்கத் திரையரங்குகள் மூலமாக மட்டும் 80 மில்லியன் டாலர்களையும், மற்ற நாடுகளில் 78 மில்லியன் டாலர்களையும் மொத்தமாக 158 மில்லியன் டாலர்களையும் வசூலித்து அசத்தியது. இது கடந்த ஒரு வருட தொற்றுக் காலத்தில் வெளியான படங்களில் அதிக வசூலாகும்.

சில வாரங்களுக்கு முன் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9'-வது பாகம் வெளியாகி அமெரிக்காவில் 70 மில்லியன் டாலர்களை வசூலித்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை 'ப்ளாக் விடோ' முந்தியுள்ளது. இன்னும் சீனாவில் 'ப்ளாக் விடோ' வெளியாகவில்லை. அங்கு வெளியாகும்போது வசூல் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சன ரீதியாகவும் 'ப்ளாக் விடோவு'க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் வசூல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக டிஸ்னி தனது தயாரிப்புகள் ஓடிடியில் வெளியாகும்போது அதன் வரவேற்பு குறித்தோ, அதன் மூலம் எவ்வளவு வசூல் ஆனது என்பது குறித்தோ தரவுகள் வெளியிடுவதில்லை. டிஸ்னி+ ஓடிடி தளத்தில் ப்ரீமியம் சேவையில் கூடுதலாக 30 டாலர்கள் செலுத்திப் பார்க்கக் கூடிய வகையில் வெளியான 'ப்ளாக் விடோ', அதன் மூலம் மட்டும் 60 மில்லியன் டாலர்களை வசூலித்திருப்பதாக டிஸ்னி அறிவித்துள்ளது

2008ஆம் ஆண்டு ஆரம்பித்த மார்வல் திரைப்படப் பிரபஞ்சத்தில் ப்ளாக் விடோவோடு சேர்த்து இதுவரை 24 திரைப்படங்கள் வெளியாகி மொத்தம் 22 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 'ப்ளாக் விடோ' அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெளியாகிறது. அன்றே டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE