ஃபார்முலா ரேஸ் லெவல் 1 பயிற்சி முடித்த நிவேதா பெத்துராஜ்: சுவாரஸ்யப் பின்னணி

By செய்திப்பிரிவு

ஃபார்முலா ரேஸ் லெவல் 1 பயிற்சியை முடித்துள்ளார் முன்னணி நடிகையான நிவேதா பெத்துராஜ்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். 'ஒரு நாள் கூத்து', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'டிக் டிக் டிக்', 'சங்கத்தமிழன்', 'பொன் மாணிக்கவேல்', 'பார்ட்டி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஃபார்முலா ரேஸ் லெவல் 1 பயிற்சியை முடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

திடீரென்று ஃபார்முலா ரேஸ் லெவல் 1 பயிற்சி ஏன் என்பது குறித்து நிவேதா பெத்துராஜ் கூறியிருப்பதாவது:

"கார்களின் மீதான காதல், பள்ளிக்குச் சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது. நான் 8-வது படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது.

என்னுள் பல வருடங்களாக நீடித்திருந்த இந்த வேட்கையில் 2015 ல் "Dodge Challenger" ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன். அரபு நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான்தான். ஆனால், இந்த காரில் மிக வேகமாகப் போகக்கூடிய வி6 இன்ஜின் இருந்ததை, எனது தந்தை விரும்பவில்லை. ஆனால் நான் மிக நம்பிக்கையுடனும், உறுதியுடனும் அந்த காரை ஓட்டினேன்.

அது மிக அற்புத அனுபவமாக இருந்தது. அதைத் தொடர்ந்து துபாயில், F1 மற்றும் Lexus, Rolls Royce, Chevrolet போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் Dubai Motor shows-களில் கலந்துகொண்டு வேலை செய்தேன். இது கார்களின் மீதான எனது காதலை இன்னும் அதிகமாக்கியது. நான் சென்னை வந்த பிறகு, சென்னையில் சில மோட்டர் ட்ராக்குகளைப் பார்வையிட்டேன்.

ஆனால், அப்போது ஒருபோதும், நானும் ரேஸ் டிராக்கில் கார் ஒட்டுவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு விளம்பர நிகழ்ச்சியை ஒட்டி பி.எம்.டபிள்யூ நிறுவனம் நடத்திய, அந்த வார சிறப்பு காரை ஓட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கார்களின் மீதான காதல் என்னுள் மீண்டும் துளிர்த்தது.

கோயம்புத்தூரில் உள்ள Momentum - School of Advance Racing-க்கு சகோதரருடன் சென்றபோது, அவர்கள் அளிக்கும் பயிற்சியை என்னால் முடிக்க முடியுமா? எனும் பயம் என்னுள் உருவானது. கார்களின் மீதான காதல் மற்றும் ஆர்வத்தால் மூன்று மாதம் முன்னதாகவே பயிற்சியில் சேர்ந்தேன். ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் 8 பேர் கலந்துகொள்வார்கள். அதில் ஒரே பெண் நான்தான்.

ட்ராக்குகளில் கலந்துகொண்ட அனுபவம் இருந்ததால் கார் ஓட்டும்போது எனக்கு நம்பிக்கை கூடியது. முடிவில் காரை ஓட்டி முடிக்கும் எனது Lap timings என்னுடன் கார் ஓட்டிய ஆண்களுக்கு இணையாக இருந்தது. இது Motorsports ஆண்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கும்தான் என்கிற மிகப்பெரிய தன்னம்பிக்கையை எனக்கு அளித்தது.

நாகரிகம் இவ்வளவு முன்னேறிய காலத்திலும் பெண்களுக்கான Formula 1 மற்றும் Formula 2 championships நடத்தப்படுவதில்லை. விரைவில் பெண்களுக்கான முறையான கார் பந்தயங்கள் நடைபெறும் என நம்புகிறேன்".

இவ்வாறு நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, நிவேதா பெத்துராஜ், "பல சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ள, இப்போதே அழைப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்காகப் பயிற்சியில் ஈடுபட நிறைய முதலீடும் அர்ப்பணிப்பும், உழைப்பும் தேவைப்படும். திரையுலகில் நான் பிரபலமாக இருப்பதால் ஸ்பான்சர் பெறுவது மிக எளிது. மிக அதிகப் பணம் தேவைப்படும் போட்டி இது. ஒவ்வொரு போட்டிக்கும் 15 லட்சம் வரை பணம் தேவைப்படும். ஆதலால் நான் முழுதாக தயாரான பிறகு நான் ஆசைப்பட்டால் மட்டுமே கலந்துகொள்வேன். இப்போதைக்கு எனது முழு விருப்பமும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பயிற்சியை முடிக்க வேண்டும் என்பதுதான்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE