தமிழ் சினிமாவும் காதலும் என்றென்றும் பிரிக்க முடியாதவை. பார்த்தவுடன் காதல். பழகியவுடன் காதல். மோதலுக்குப் பின் காதல், பிரிந்துபோன காதல், மன்னர் காலத்து, காவியக் காதல், சமகாலக் காதல், கண்களால் மட்டுமே வெளிப்படுத்தப்படும் காதல், கடித வழிக் காதல், தொலைபேசி காதல், செல்போன் காதல், ஸ்மார்ட்போன் காதல், ஃபேஸ்புக் மெசஞ்சர் காதல் என பற்பல வகையான காதல்கள் தமிழ் சினிமாவில் கையாளப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 'பார்க்காமலே காதல்' என்னும் புதுமையான சிந்தனையை முன்வைத்த படம்தான் 'காதல் கோட்டை'. 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (1996 ஜூலை 12) வெளியான 'காதல் கோட்டை' அந்தக் காலத்தில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. தலைமுறைகளைக் கடந்து இன்றைக்கும் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.
கடந்துவிட்ட காலத்தின் பதிவு
சில திரைப்படங்கள் எந்தக் காலகட்டத்துக்கும் பொருத்தமானவை. சில திரைப்படங்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே பொருத்தமானவை. அந்தத் திரைப்படம் உருவான காலகட்டத்தில் நிலவிய சூழலுடன் பின்னிப் பிணைந்தவை. அந்தச் சூழலுக்கே உரிய பிரத்யேகத் தன்மைகளை உள்ளடக்கியவை.
எக்காலகட்டத்துக்கும் பொருத்தமான கதை என்பது ஒரு சிறப்பு என்றால் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே பொருத்தமானது என்பது இன்னொரு வகையான சிறப்பு. கடந்த காலத்துக்குத் திரும்பிச் சென்று பார்க்க முடியாது. ஆனால் அந்தக் காலம் இதுபோன்ற திரைப்படங்களில் உறைந்துவிடுகின்றது. அதன் மூலம் அக்காலகட்டம் எப்படி இருந்தது என்பதை அப்போது வாழ்ந்தவர்கள் நினைத்துப் பார்த்து அசைபோடவும் அதற்குப் பிறகு வாழ்கிறவர்கள் அது எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ளவும் உதவுவது இதுபோன்ற திரைப்படங்களின் தனிச் சிறப்பு. இது சினிமா என்னும் காட்சி ஊடகத்தின் சிறப்பும்கூட.
அந்த வகையில் செல்போன்கள் என்றால் என்ன என்றே தெரிந்திராத, தொலைபேசிகள் பணக்காரர்களைத் தாண்டி மற்றவர்களிடையே பரவலாகியிராத தபால்காரர் துணையுடன் பரிமாறிக் கொள்ளப்படும் கடிதங்கள், எப்போதாவது பயன்படுத்தப்படும் பொதுத் தொலைபேசிகள் ஆகியவற்றின் மூலமாக காதல் வளர்ந்த 1990களின் காலகட்டத்தின் கச்சிதமான பதிவு 'காதல் கோட்டை'.
அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் குறிப்பாகக் காதலித்தவர்கள் தமது கடந்த காலத்தை, கடந்துவிட்ட காதல் நினைவுகளில் சஞ்சரித்து நிகழ்காலத்தின் நெருக்கடிகளிலிருந்து ஒரு சில மணித்துளிகளுக்காவது ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும் காதல் படங்களில் 'காதல் கோட்டை' முதன்மையானது. அதேபோல் உலகின் எந்த மூலையிலிருந்தும் வேறெந்த மூலையில் இருப்பவரிடம் வேண்டுமானாலும் உடனடியாகக் கையிலிருக்கும் ஸ்மார்ட்போனை கிளிக் செய்து பைசா செலவில்லாமல் வீடியோ கால் செய்து முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசிவிடக்கூடிய இந்த டிஜிட்டல் புரட்சி காலகட்டத்தில் காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அவர்களின் முன்னோர்கள் எப்படி எல்லாம் காதலித்தார்கள் எவ்வளவு சவால்களையும் சிரமங்களையும் எதிர்கொண்டார்கள் என்பதன் காட்சிப் பதிவாகக் காதலின் மகத்துவத்தை உணர்த்துகிறது 'காதல் கோட்டை'.
இயல்பான திரைக்கதையும் நேர்த்தியான இயக்கமும்
தரமான திரைப்படங்களின் இயக்குநர் என்று ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற இயக்குநர் அகத்தியனின் அடையாளம் 'காதல் கோட்டை'. 'பார்க்காமலே காதல் என்னும் நினைத்துப் பார்க்கவே சாத்தியமற்றதாகத் தோன்றும் விஷயத்தை அனைவரையும் கவர்ந்த திரைப்படமாக காலங்கடந்து ரசிக்கப்படும் காவியமாக உருவாக்கியிருந்தார் அகத்தியன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்திலும் தன் தனித்துவம் படைப்புத்திறனைக் கலை சார்ந்த முதிர்ச்சியான பார்வையையும் அபாரமாக வெளிப்படுத்தியிருந்தார்.
நாயகன் சூர்யாவும் நாயகி கமலியும் கடிதப் போக்குவரத்து மூலம் தொடர்பாடத் தொடங்குவது, அந்த பரஸ்பர அக்கறையும் மரியாதையும் கடிதப் போக்குவரத்திலேயே காதலாக மலர்வது, நம்முடையது இதயத்தில் தொடங்கி கண்களில் நிறைவடையும் காதலாக இருக்க வேண்டும் என்று இருவரும் முடிவெடுப்பது, அதற்குப் பிறகு சந்தித்துக்கொள்ள ஏற்படும் தடைகள், இவர்தான் தான் தேடிக்கொண்டிருக்கும் காதலர் என்று தெரிந்துகொள்ளாமலே இருவரும் பல முறை சந்தித்துக்கொள்வது, அந்தச் சந்திப்புகள் யதேச்சையாக கசப்பான அனுபவங்களாக அமைவது, இறுதியில் அந்தக் கசப்பைத் தாண்டி இருவருக்கும் இடையில் ஒரு பரிவுணர்வு முகிழ்வது, அந்த முகிழ்வு முறிந்துவிடுமோ என்னும் உச்சக்கட்ட தருணத்தில் இவர்தான் நாம் இத்தனை நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தவர் என்பதை அறிந்துகொண்டு சூர்யாவும் கமலியும் வாழ்வில் இணைவது என திரைக்கதையின் ஒவ்வொரு நகர்வையும் மிக இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் ரசிகர்களால் தம் அன்றாட வாழ்வின் சாத்தியங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையிலும் அமைத்திருப்பார் அகத்தியன்.
சூர்யாவுக்கும் கமலிக்கும் இடையே ஒரே ஒரு முறை நிகழும் பொதுத் தொலைபேசி உரையாடல் முயற்சி அந்த நேரம் பார்த்து அருகே கடந்து செல்லும் ஊர்வலத்தின் இரைச்சலால் தோல்வியடைவது, அதற்குப் பிறகு அஞ்சல் துறை வேலை நிறுத்தத்தால் கடிதப் போக்குவரத்தும் நின்று போவது ஆகியவற்றை இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். இவை திரைக்கதையின் தேவைக்கேற்ற திணிப்பாக இல்லாமல் மிக இயல்பான ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுடன் திரைக்கதையில் இணைக்கப்பட்டிருக்கும். அஞ்சல் துறை வேலை நிறுத்தம் முதன்மைக் கதாபாத்திரங்களின் உரையாடலில் இல்லாமல் கதைக்கு வெளியே உள்ள சாதாரண மனிதர்களின் அன்றாட உரையாடலின் பகுதியைப் போல் இயல்பாகப் பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.
கதாபாத்திரங்களின் முழுமை
அதேபோல் சூர்யா, கமலி மட்டுமல்லாமல் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு முழுமை இருக்கும். கமலியைப் பெறாத பெற்றோராக அவருடைய அக்காவும் (சபீதா ஆனந்த்) அக்கா கணவரும் (ராஜீவ்), சூர்யாவுக்கு ஒரு உடன்பிறவா சகோதரரைப்போல் உதவும் ஜெய்ப்பூர் தமிழர் (பாண்டு), சூர்யாவை ஒரு தலையாக உயிருக்கு உயிராகக் காதலிக்கும் அவருடைய முதலாளி நேயா (ஹீரா), காதல், பெண்கள் போன்ற விஷயங்களில் சூர்யாவுக்கு நேரெதிர் அணுகுமுறையைக் கொண்ட அவருடைய அலுவலக நண்பர் (கரண்), ஆட்டோ ஓட்டுநரும் நண்பருமான (தலைவாசல் விஜய்), கமலியின் சென்னை வாழ் தோழி (இந்து), கமலியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஊட்டி செல்வந்தர் (ராஜா) என அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு தொடக்கம், பின்னணி, நிறைவு என அமைந்திருக்கும்.
இவ்வளவு மேன்மையான காதலைச் சித்திரித்த திரைப்படத்தில் காதல் என்னும் இயற்கையான உணர்வு எந்த வகையிலும் புனிதப்படுத்தப்பட்டிருக்காது என்பது 'காதல் கோட்டை'யின் இன்னொரு தனித்துவமான சிறப்பு. 'பார்க்காமலே காதல்' என்னும் விஷயத்தை நாயகன், நாயகியைத் தவிர கதையின் மற்ற கதாபாத்திரங்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விமர்சிப்பார்கள், கிண்டலடிப்பார்கள் நிராகரிப்பார்கள். அதேபோல் இவர்தான் தான் தேடும் சூர்யா என்று தெரியாமல் அவரை சந்திக்கும்போதெல்லாம் எரிந்துவிழும் கமலி, அதற்கான காரணத்தைத் தன் தோழியிடம் கூறும்போது தனக்கு அவர் மீது ஈர்ப்பு வந்துவிடுமோ என்கிற அச்சத்தால்தான் அப்படி எரிந்துவிழுந்ததாகக் கூறும் இடத்தில் எத்தகைய காதலும் புனிதமானதல்ல அனைத்தும் இயல்பான மனித உணர்வுகளே என்பதைப் பதிவு செய்திருப்பார் அகத்தியன்.
தமிழுக்கு முதல் விருது
ஊட்டியின் குளுமை, ஜெய்ப்பூரின் வெம்மை, ரயில் நிலையங்களின் பரபரப்பு என ஒவ்வொன்றையும் ரசிகர்கள் திரையரங்கிலிருந்தபடியே உணரும் விதமாக காட்சிகளையும் அவற்றின் சூழலையும் பின்னணியும் கச்சிதமாக உருவாக்கியிருந்தார் இயக்குநர் அகத்தியன். கதாபாத்திரங்களுக்கான கச்சிதமான நடிகர்கள் தேர்வு அவர்களிடமிருந்து சிறந்த நடிப்பை வாங்கியது. கண்களை மகிழ்வித்து மனதுக்கும் நிறைவை அளிக்கும் திரைப்படமாக்கம் என ஒரு இயக்குநரின் பணியிலும் பிரமாதப்படுத்தியிருப்பார் அகத்தியன்.
இப்படி ஒரு திரைப்படத்துக்குச் சிறந்த தமிழ்ப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று தேசிய விருதுகள் கிடைத்ததில் ஆச்சரியமில்லை. குறிப்பாக தேசிய விருதுகள் கொடுக்கப்படத் தொடங்கி 44 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு தமிழ்த் திரைப்படத்துக்குச் சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. அந்த விருதை வென்ற முதல் தமிழர் அகத்தியன் என்னும் வரலாற்றுச் சாதனை படைத்தது 'காதல் கோட்டை'.
அனைத்து நடிகர்களுக்கும் மறக்க முடியாத படம்
அப்போது வளர்ந்துவரும் நாயக நடிகராக இருந்த அஜித்துக்கு மிக முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது 'காதல் கோட்டை'. அதோடு அவர் மீது ரசிகர்களுக்கு ஒரு நன்மதிப்பு உருவாகும் கதாபாத்திரமாக சூர்யாவை வடிவமைத்திருந்தார் அகத்தியன். அதை முழுமையாக உணர்ந்து கண்ணியமான கதாநாயகனைக் கண்முன் நிறுத்தியிருந்தார் அஜித். கமலியாக தேவயானி பாரம்பரிய விழுமியங்களில் பிடிப்புகொண்ட அதே நேரம் சொந்தக் காலில் நிற்கும் உந்துதலுடைய பெண்ணாக சிறப்பாக நடித்திருப்பார். தலைவாசல் விஜய், ஹீரா, ராஜீவ், கரண், பாண்டு, சபீதா ஆனந்த், இந்து என துணைக் கதாபாத்திரங்களில் நடித்த அனைவருக்கும் அவர்கள் திரை வாழ்வில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
தெவிட்டாத தேனிசை
தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் எக்காலத்துக்கும் ரசிக்கப்படுபவையாக அமைந்தன. ஏழில் ஐந்து பாடல்களை அகத்தியன் எழுதியிருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-அனுராதா ஸ்ரீராம் குரலில் அமைந்த 'நலம் நலமறிய ஆவல்' என்னும் மெலடி டூயட் பாடல் செவிகளில் பாயும் தேனாக இன்றைக்கும் இனிக்கிறது. அதன் வரிகளோ கதையின் மையச்சாரத்தை அழகாக உணர்த்தும் விதத்தில் அமைந்திருக்கும். 'கவலைப்படாதே சகோதரா' என்னும் கானா பாடல் தேவாவின் தனிச் சிறப்பான இசையில் காலத்தால் அழிக்க முடியாத இடத்தைப்பெற்றுவிட்டது. தேவாவின் உயிர்ப்பு மிக்க பின்னணி இசையும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உணர்வை மேலும் ஈர்ப்புக்குரியதாக ஆக்கியது. அஜித்திடம் ஹீரா தன்னுடைய காதலை வெளிப்படையாகக் கூறும் உணர்வுபூர்வமான காதல் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் இசை மொபைல் ரிங்டோனாக வைக்கும் அளவுக்கு இனிமையானது.
பளிச்சென்ற சூரிய ஒளி, இரவுநேரத்தில் மெழுகுவர்த்திகளின் சன்னமான ஒளி, கண்களை உறுத்தாத ஒளிக்கலவைகள், நிறங்கள் என தங்கர்பச்சானின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்த மதிப்புக்கு வலுசேர்த்தன.
இப்படிப் பல காரணங்களுக்காகத் தமிழ் சினிமாவில் தலைசிறந்த மேன்மையான காதல் திரைப்படங்களில் ஒன்றாக என்றென்றும் நிலைத்திருக்கும் 'காதல் கோட்டை'.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago