பாகுபலி முதல் பாகம் வெளியாகி 6 வருடங்கள்: படக்குழுவினர் மகிழ்ச்சிப் பகிர்வு

By செய்திப்பிரிவு

'பாகுபலி' முதல் பாகம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி படத்தில் நடித்த நடிகர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி 'பாகுபலி: தி பிகினிங்' (முதல் பாகம்) வெளியானது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

படத்தின் பிரம்மாண்டம், திரைக்கதை, விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. மாபெரும் வெற்றியைப் பெற்ற இப்படம் 600 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. அதிக வசூல் செய்த டப்பிங் திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது. தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.

நாயகன் பிரபாஸ் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றார். 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அத்தனை படங்களுமே தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

'பாகுபலி' வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவானதையொட்டி படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

"இந்திய சினிமாவின் பாதையையே மாற்றிய ஒரு திரைவரிசையில் பங்கெடுத்தது பெருமை. 'பாகுபலி'க்கு என்றுமே என் இதயத்தில் விசேஷமான இடம் இருக்கும்" என்று தமன்னா பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் பலர், பாகுபலி எமோஜியை வாட்ஸ் அப் வெளியிட வேண்டும் என்று கோரி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

2017ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி 2', முதல் பாகத்தை விட மிகப்பெரிய வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE