படத்தை விட மக்களுக்குத் தடுப்பூசி போடுவதே முக்கியம்: 'சூர்யவன்ஷி' வெளியீடு குறித்து ரோஹித் ஷெட்டி

By செய்திப்பிரிவு

'சூர்யவன்ஷி' வெளியீடு குறித்துப் பேசியிருக்கும் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, இப்போது நாட்டில் முக்கியமான விஷயம் தடுப்பூசி போடுவதுதான் என்று கூறியுள்ளார்.

அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து 'சூர்யவன்ஷி' படத்தை இயக்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி. முக்கியமாக இதில் 'சிங்கம்' அஜய் தேவ்கன், 'சிம்பா' ரன்வீர் சிங் என மற்ற இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றன.

கரோனா அச்சுறுத்தலால் சுமார் ஓராண்டாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வட இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வராத காரணத்தால், 'சூர்யவன்ஷி' வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

3 முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் என்பதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களும் 'சூர்யவன்ஷி' வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள். கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 'சூர்யவன்ஷி' வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால், இந்தத் தேதியிலும் படத்தை வெளியிட முடியவில்லை.

இந்நிலையில் படத்தின் வெளியீடு குறித்து, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ரோஹித் ஷெட்டியிடம் கேட்கப்பட்டது.

”எப்போது திரையரங்குகள் திறக்கும் என்பதுதான் கேள்வியே. இப்போது அதி முக்கியமான விஷயம் நாட்டிலிருக்கும் மக்களுக்குத் தடுப்பூசி போடுவது. அது நடக்கும்போது எல்லாம் சகஜமாகும். எல்லாம் மெதுவாக சரியாகிவிடும் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. தொடர்ந்து முன்னெச்சரிக்கைகளைத் தொடர வேண்டும். ஏனென்றால் இன்றும் கூட எல்லாம் சரியாகிவிடவில்லை. மற்ற நாடுகளில் தொற்று அதிகரித்து வருகிறது.

இம்முறை நாம் அனைவரும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாம் திறந்துவிட்டார்களே என்று சுற்றுலா செல்லக் கூடாது. இன்னொரு பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் திறக்கப்படுவது நல்லதுதான். அதே நேரம் அதில் நாம் அதிக உற்சாகமடைந்துவிடக் கூடாது. இல்லையென்றால் மீண்டும் எல்லாம் மூடப்படும். அதுவும் இரண்டாவது அலைக்குப் பிறகு அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது” என்று ரோஹித் ஷெட்டி பதிலளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE