முதல்வர் ஸ்டாலினுடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு: கரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் அளிப்பு

By செய்திப்பிரிவு

திரையரங்க உரிமையாளர்கள் கரோனா நிவாரண நிதியாக 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும், பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வரிடம் முன்வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கரோனா நிவாரண நிதியாக பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இதனிடையே, இன்று (ஜூலை 8) திரையரங்க உரிமையாளர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து 50 லட்ச ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து திரையரங்குகள் திறப்பு தொடர்பாகப் பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தார்கள்.

முதல்வரைச் சந்தித்துவிட்டு, பத்திரிகையாளர்கள் மத்தியில் திரையரங்க உரிமையாளர்கள் பேசியதாவது:

"தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வரைச் சந்தித்தோம். அப்போது எங்களுடைய சங்கத்தின் சார்பாக கரோனா நிவாரண நிதியாக 50 லட்ச ரூபாய் வழங்கினோம்.

திமுக ஆட்சியின்போது திரையரங்குகளுக்கு நிறைய சலுகைகள் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல், தற்போதைய எங்களது சிரமங்களைத் தமிழக முதல்வரிடம் சொன்னோம். கட்டாயம் எங்களுடைய அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் கலைஞர் ஆட்சியின்போதுதான் வரியே இல்லாத மாநிலமாக இருந்தது. தமிழில் பெயர் வைத்தால் முழுமையாக வரி ரத்து என்று சொன்னவர் கலைஞர். ஒவ்வொரு முறையும் திரையரங்கிற்கும், திரைப்படத் தொழிலுக்கும் நிறைய சலுகைகள் கொடுத்தார். அதேபோல், தற்போதைய முதல்வரையும் கலைத்துறையைச் சார்ந்தவர் என்றுதான் சொல்வோம். கலைத்துறையின் சிரமங்கள் அனைத்துமே அவருக்குத் தெரியும்.

விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி கொடுப்பார்கள், அதற்கான அறிவிப்பு விரைவில் இருக்கும் என நம்புகிறோம். அரசாங்கம் என்ன விதிகள் சொல்கிறதோ, அதற்குக் கட்டுப்பட்டு திரையரங்குகளைத் திறக்க ஆவலுடன் இருக்கிறோம். என்ன விதிகள் என்றாலும் அதற்கு உட்பட்டு, உடனே திரையரங்குகளைத் திறக்கவுள்ளோம்.

திரையரங்குகளுக்கான உரிமையை வருடத்துக்கு ஒருமுறை செய்துகொள்ள அனுமதி தாருங்கள் என்று கேட்டுள்ளோம். அதையும் ஆவன செய்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல், திரையரங்குகள் திறக்கப்பட்டால் தயாரிப்பாளர்கள் யாருமே ஓடிடி வெளியீட்டுக்குச் செல்ல மாட்டார்கள். என்ன வந்தாலும் திரையரங்குகள் எப்போதுமே அழியாது.

திரையரங்குகள் மூடியிருப்பதால்தான் ஓடிடிக்குச் செல்கிறார்கள். ஆகையால், நாங்களும் எதுவுமே சொல்ல முடியாமல் இருக்கிறோம். திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகே ஓடிடி வெளியீட்டுக்குச் செல்லவுள்ளார்கள். அதேபோல், இந்தியாவிலேயே டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இப்போதுள்ள கட்டணமே எங்களுக்குப் போதுமானதாக இருக்கிறது".

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE