மிர்ச்சி சிவா, யோகி பாபு, ஊர்வசி நடிக்கும் 'காசேதான் கடவுளடா' ரீமேக்

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புகழ்பெற்ற நகைச்சுவைப் படங்களில் ஒன்றான 'காசேதான் கடவுளடா' மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது.

சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் 'காசேதான் கடவுளடா'. 1972ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.

பல தலைமுறைகளைக் கடந்து இன்றுவரை இந்தப் படம் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் ரீமேக்கை 'ஜெயம்கொண்டான்', 'கண்டேன் காதலை' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்குகிறார்.

மிர்ச்சி சிவா, யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி ஆகியோர் இந்த ரீமேக்கில் நடிக்கின்றனர். முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் யோகி பாபுவும், மனோரமா பாத்திரத்தில் நடிகை ஊர்வசியும் நடிக்கவிருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ரீமேக் குறித்துப் பேசியிருக்கும் ஆர்.கண்ணன், " 'காசேதான் கடவுளடா' திரைப்படம் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு கச்சிதமான படைப்பு. எனவே இப்படத்தின் மறு உருவாக்கத்திற்கான முறையான அனுமதியைப் பெற்று, தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றவகையில் ரீமேக் செய்யவுள்ளோம். அற்புதத் திறமை வாய்ந்த எங்கள் குழுவினர், இப்படத்தை மீண்டும் ஒரு அழகான படைப்பாக மாற்றுவார்கள் என மிக ஆழமாக நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15 அன்று தொடங்கி, ஒரே கட்டமாக 35 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனனும், எம்கேஆர்பி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் 'தள்ளிப்போகாதே', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய திரைப்படங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE