தயாரிப்பாளர்களுக்குத் திரையரங்க உரிமையாளர்கள் எச்சரிக்கை: தெலுங்குத் திரையுலகில் வெடிக்கும் மோதல்

தெலுங்குத் திரைப்படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவது குறித்துத் திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா முதல் அலை பரவத் தொடங்கியது முதலே திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் வெளியீட்டுக்குத் தயாராக இருந்த படங்கள் அனைத்தும் ரிலீஸாக முடியாமல் முடங்கின. இதனால் திரைத்துறைக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உண்டானது. இந்நிலையில் பெரிய பட்ஜெட் படங்கள் உட்படப் பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது திரையரங்க விரும்பிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

கரோனா முதல் அலை குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டும் எதிர்பார்த்த மக்கள் கூட்டம் திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கவில்லை. மாறாக நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்தச் சூழலில் கேரள அரசாங்கம் ஒருபடி மேலே போய் மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ‘நாரப்பா’, ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய இரு படங்களும் நேரடி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

நேற்று (ஜூலை 07) தெலங்கானா திரைப்பட வர்த்தகக் கூட்டமைப்பு (TFCC) சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அந்தக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஒட்டுமொத்தத் தெலுங்குத் திரைத்துறையின் நலனை விட தயாரிப்பாளர்கள் சிலர் தங்கள் சொந்த நலனில் குறியாக இருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவிலும் நாங்கள் ஏன் இன்னும் திரையரங்கத் தொழிலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்? அதற்குக் காரணம் சினிமாவின் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வம் மட்டுமே. எனவே அதைப் புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

அதேபோல திரையரங்க வெளியீட்டுக்கும், ஓடிடி வெளியீட்டுக்கும் இடையே குறிப்பிட்ட கால அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும். நீங்கள் இனியும் நேரடி ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்தால், எதிர்காலத்தில் அதை எப்படிக் கையாள்வது என்று எங்களுக்குத் தெரியும். எனவே, தயவுசெய்து ஓடிடி தளங்களுக்குச் செல்லாதீர்கள்''.

இவ்வாறு தெலங்கானா திரைப்பட வர்த்தகக் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE