வீட்டில் இருக்கும்போது பணியைப் பற்றி யோசிப்பது அரிது: ஃபகத் பாசில்

தான் வீட்டில் இருக்கும்போது தனது நடிப்புத் தொழிலைப் பற்றி நினைப்பது மிகவும் அரிதானது என்றும், ஒரு நடிகன் கேமராவுக்கு முன் நடிப்பதைப் பற்றி நினைத்தால் போதுமென்றும் நடிகர் ஃபகத் பாசில் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் ’ஸி யூ ஸூன்’, ’இருள்’, ’ஜோஜி’ என்ற மூன்று திரைப்படங்கள் ஃபகத் பாசில் நடிப்பில் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளன. இதில் இருளைத் தவிர மற்ற இரண்டு படங்களும் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பிலும் வரவேற்பைப் பெற்றன. ஃபகத் பாசிலின் அடுத்த படமான ’மாலிக்’கும் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இதையொட்டி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஃபகத் பாசில் கூறியிருப்பதாவது.

"நான் என் பணியைப் பற்றி வீட்டில் யோசிப்பது அரிது. சில கதாபாத்திரங்கள் நம்மைத் தூங்கவிடாமல் யோசிக்க வைக்கும். அப்படிச் சில நாட்கள் சென்றிருக்கலாம். ஆனால், அதுபோல இருக்கக் கூடாது. ஏனென்றால் கேமராவுக்கு முன் நடிப்பது மட்டுமே நடிகனின் பொறுப்பாக இருக்க வேண்டும். கேமராவுக்குப் பின் அல்ல. சில காட்சிகள் நடித்த பிறகும் தாக்கம் இருக்கும். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதுவும் நடந்ததில்லை .

நான் என்றுமே ஒரு கதாபாத்திரத்தை வைத்துப் படத்தை ஒப்புக்கொள்வதில்லை. கதையோட்டத்தை வைத்துதான் ஒப்புக்கொள்கிறேன். கதாபாத்திரத்தைப் பார்த்து நான் செயல்படுவதில்லை. அந்தக் கதை சொல்லப்படும் விதம் எனக்கு உற்சாகம் தர வேண்டும். கதாபாத்திரம் எவ்வளவு நேரம் கதையில் வருகிறது என்பது எனக்கு முக்கியமல்ல. கதை ரசிகர்களிடம் எப்படிச் சொல்லப்படுகிறது, என் கதாபாத்திரம் அவர்களிடம் எப்படிக் காட்டப்படுகிறது என்பதே எனக்கு முக்கியம்.

எனது திரைப்படங்களில் பெரும்பாலும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். நான் நல்ல மன ஓட்டத்தோடு அங்கு இருந்தால் போதும். என்ன செய்ய வேண்டும் என்பதைக் கதாசிரியரும், இயக்குநரும் எனக்குச் சொல்வார்கள்" .

இவ்வாறு ஃபகத் பாசில் பேசியுள்ளார்.

’மாலிக்’ படத்தைப் பற்றிப் பேசுகையில், "ஒரு சமூகத்தின் 30 வருட வாழ்க்கையைச் சொல்லும் கதை இது. பொழுதுபோக்குப் படமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல், காதல், பழிவாங்குதல் என எல்லாம் இந்தப் படத்தில் உள்ளன. எதையும் அதிகப்படியாகச் செய்யவில்லை. எல்லாமே இதில் உள்ளன" என்று ஃபகத் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE