ஓடிடி பார்வை: Our Planet

By முகமது ஹுசைன்

2019இல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்தத் தொடர், பூமியின் ஒட்டுமொத்த அழகையும் நம் கண்களையும் மனத்தையும் கவரும் வகையில் காட்சிப்படுத்தி பிரமிப்பில் ஆழ்த்துகிறது. பெரியன் கடற்கரையில், இரையைத் தேடி, வானை மறைத்து விண் முழுவதும் நிரம்பிப் பறக்கும் லட்சக்கணக்கான நீர்க் காகங்கள், ஆர்டிக் பகுதியிலிருக்கும் உறைந்த காடுகளில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸில், உறைவிடம் தேடிச் செல்லும் கலைமான் மந்தைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்ட விதமும் தரமும் இதுவரை நாம் பார்த்திராதவை.

டேவிட் அட்டன்பரோ தொகுத்து வழங்கும் இந்த பிரம்மாண்டத் தொடர் எட்டு பாகங்களைக் கொண்டது. பெரும் பொருட்செலவில், 600க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில், 50 நாடுகளில், நான்கு ஆண்டுகளுக்கு மேல் எடுக்கப்பட்ட இந்தத் தொடர், இயற்கையின் அதிசயங்களையும், அதன் முடிவற்ற துல்லியமான செயல்பாடுகளையும், ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இயைந்து இயங்கும் அதன் அங்கங்களையும், காலவோட்டத்தில் அது அடையும் பரிணாம மாற்றங்களையும் காட்சிக் கவிதைகளின் மூலம் நமக்கு உணர்த்தும் விதம் அலாதியானது.

இயற்கையின் அழகை அழகியலோடு படமாக்குவது மட்டும் இந்தத் தொடரின் வெற்றிக்குப் போதுமானது. எனினும், இந்தத் தொடர் அதனைத் தாண்டிச் செல்கிறது. மனிதனின் சுயநலத்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் இயற்கை அடையும் பாதிப்புகள் குறித்த காட்சிகளும் தரவுகளும் நம்மைக் குற்றவுணர்வில் நெளிய வைக்கின்றன. அது எழுப்பும் பல கேள்விகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

சுற்றுச்சூழல் மீது அக்கறையையும் இயற்கை மீது காதலையும் நம்முள் இந்தத் தொடர் ஏற்படுத்துகிறது. இதுவே இந்தத் தொடரின் உண்மையான வெற்றி. பொழுதுபோக்கு என்கிற எல்லையைக் கடந்து, சுற்றுச்சூழலின் மீது நாம் கொள்ள வேண்டிய பொறுப்பு குறித்தும் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டிய அவசியத்தையும் பேசும் இந்தத் தொடர் நாம் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று. குறிப்பாகக் குழந்தைகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE