இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார்: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திலீப்பின் உடல்நிலை தேறி வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். இந்தத் தகவலை திலீப் குமாரின் மருத்துவர் ஜலீல் பார்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

யூசுப் கான் என்ற இயற்பெயரைக் கொண்ட திலீப் குமார் பாலிவுட்டின் 1950, 60களில் பாலிவுட்டின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். அவரது நடிப்பில் வெளியான ‘தேவ்தாஸ்’, ‘மொகல்-இ-அஸாம்’, ‘கங்கா ஜமுனா’ உள்ளிட்ட படங்கள் இன்றும் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலீப் குமார் இறுதியாக 1998ஆம் ஆண்டு வெளியான ‘கிலா’ என்ற படத்தில் நடித்தார்.

திலீப் குமாரின் மறைவுக்கு இந்தியத் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார் மறைந்தார். இந்தியா- பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப் பாலமாகத் திகழ்ந்தவர். ஏழைகளின் மீது கரிசனம் மிக்கவர். நிறைவாழ்வு வாழ்ந்த கதாநாயகருக்குப் புகழஞ்சலி" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "நடிப்பில் ஒரு தரத்தையும், அர்ப்பணிப்பையும் பேண வேண்டும் என்று என்னைப் போல பல நடிகர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் வாழ்க்கை திலீப் குமாருடையது. உண்மையில் இந்தியாவின் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். ஆனால், அவரது அற்புதமான நடிப்பு என்கிற பொக்கிஷத்தை நமக்காக விட்டுச் சென்றுள்ளார். நடிப்பில் அவரது புரிதல் அணுகுமுறையை இன்னும் சமகால நடிகர்கள் சிலர் தைரியமாக முயற்சி செய்யத் துணிகின்றனர்" என்று கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

திலீப் குமாரோடு தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE