தலைக்கு மேல் கத்தி தொங்கும்போது எவ்வாறு தொழில் செய்வது?- ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா காட்டம்

By செய்திப்பிரிவு

தலைக்கு மேல் கத்தி தொங்கும்போது எவ்வாறு தொழில் செய்வது என்று ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூன் 18-ம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து இந்தியா முழுக்க உள்ள பல்வேறு திரைக் கலைஞர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக 1400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதினார்கள்.

தமிழ்த் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா, விஷால், கார்த்தி, கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பைத் தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

தற்போது ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீரவ் ஷா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இருப்பது எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், தணிக்கைச் சான்றிதழை நிராகரிப்பது ஆகப்பெரிய முட்டாள்தனம். சென்சார் போர்டின் கவனக்குறைவால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா? தலைக்கு மேல் கத்தி தொங்கும்போது எவ்வாறு தொழில் செய்வது?"

இவ்வாறு நீரவ் ஷா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE