ப்ரூஸ் லீ குறித்த டாரண்டினோவின் சர்ச்சை கருத்து: பதிலடி கொடுத்த ஷேனன் லீ 

By செய்திப்பிரிவு

ப்ரூஸ் லீ குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த டாரண்டினோவுக்கு ஷேனன் லீ பதிலடி கொடுத்துள்ளார்.

லியார்னாடோ டிகாப்ரியோ, ப்ராட் பிட் நடித்த ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படம் 2019 ஆகஸ்ட் மாதம் வெளியானது. க்வெண்டின் டாரண்டினோ இயக்கிய இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடித்த ப்ராட் பிட்டுக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.

1960களின் கதைக்களத்தைக் கொண்ட இப்படம் ஹாலிவுட் நடிகை ஷாரோன் டேட்ஸ் கொலையின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் ப்ரூஸ் லீயை அவமானப்படுத்திவிட்டார்கள் என அவரது மகள் ஷேனன் லீ இப்படத்தின் இயக்குநர் டாரண்டினோவைக் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆன்லைனில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் இதுகுறித்து டாரண்டினோவிடம் கேட்கப்பட்டபோது, ''ப்ரூஸ் லீயின் மகளைப் பொறுத்தவரை அவருக்கு ப்ரூஸ் லீ தந்தை. ஆனால், மற்றவர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை'' என்று கடுமையான தொனியில் கூறியிருந்தார்.

டாரண்டினோவின் இந்தக் கருத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கும் ஷேனன் லீ கூறியிருப்பதாவது:

''என் தந்தை குறித்து தவறான முறையில் காட்டப்பட்டிருப்பது பற்றி நான் கவலைப்படுகிறேன் என்று ஒப்புக்கொண்டமைக்கு டாரண்டினோவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். ப்ரூஸ் லீ யாரென்று எனக்குப் பாடமெடுக்கும் ஹாலிவுட் வெள்ளைக்காரர்களால் நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன். 70 மற்றும் 80களில் ஹாலிவுட் சினிமாவில் ஒரு சீன மனிதராக வேலை செய்வது எப்படிப்பட்டது என்று தெரியாமல், அவர் ஒரு முரடர், மோசமானவர், என்று ஹாலிவுட்டில் இருக்கும் வெள்ளைக்காரர்கள் சொல்வது சோர்வைத் தருகிறது''.

இவ்வாறு ஷேனன் லீ கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE