ஏ.எம். ராஜா - இதமான குரலில் இசையின் ஊர்வலம்

By செய்திப்பிரிவு

ஒரு ஆணுக்குள், பெண்ணின் நளினம் ஒளிந்திருக்கும். ஒரு பெண்ணுக்குள், ஆணின் கம்பீரம் பொதிந்திருக்கும். இயற்கையின் விதிமீறல் இது. விதிமீறல்கள், சில சமயம் விதிகளை விட அழகாக இருக்கும். தன்னை மறந்து தூங்கும் குழந்தையை, அதன் அனுமதி பெறாமல் முத்தமிடுவது மாதிரி. ஆணின் கம்பீரத்தையும், பெண்ணின் நளினத்தையும் தன் குரலில் ஒளித்து வைத்துக் கொண்டு ஒப்பனை செய்து ஒப்பற்ற பாடல்களை வழங்கியது. அந்தக்குரல், ஏ.எம். ராஜாவினுடையது.

Aemala Manmadharaju Rajah. இந்த நீண்ட பெயரின் சுருக்கெழுத்து தான் ஏ.எம். ராஜா. 1929-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ராமச்சந்திரபுரம் தான் ஏ.எம். ராஜாவின் பிறப்பிடம். தெலுங்கு தான் இவரது தாய்மொழி. ஆனால், இவர் தமிழில் பாடிய அத்தனை பாடல்களும் தேன்மொழி. அதற்கு ஒரு உதாரணம், அமரதீபம் படத்தில் வரும் 'தேன் உண்ணும் வண்டு'.

தொடக்கக் கல்வி, உயர் கல்வியை ஆந்திராவில் அரங்கேற்றிவிட்டு, சென்னை வந்த ஏ.எம். ராஜா, பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இளமை முதல், உணவோடு, இசையும் உணர்வாகவே ஊட்டப்பட்டதால், மேற்கத்திய இசை, சாஸ்திரிய சங்கீதத்தில் கற்றுத்தேர்ந்தார் ஏ.எம். ராஜா. பல தெலுங்குப் பாடல்களை அவரே எழுதி இசையமைத்து HMV நிறுவனம் மூலம் வெளியிடச் செய்தார். இந்தப் பாடல்கள் தான் பின்னாளில், திரைப்படத்துறையில், ஏ.எம். ராஜா வர்ண மெட்டுகள் இடவும், வசந்த கீதம் பாடவும் வழிகாட்டின.

மேட்டுக்குடிகளிடம் வசித்து வந்த கர்நாடக இசையை, ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன் போன்ற மேதைகள் கைபிடித்து பாமரர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். கர்நாடக இசையைக் கேட்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு, வட இந்திய பாடல்கள், குறிப்பாக, கஜல் பாடல்களின் பாணியைக் கையாண்டு, தமிழ் ரசிகர்களுக்கு புது சுவையை அறிமுகப்படுத்தினார் ஏ.எம். ராஜா. ஹிந்தி திரைப்படப் பாடல் உலகின் இணையற்ற சக்கரவர்த்தி முஹமது ரஃபீயின் பாடும் முறைகளை ஒற்றியெடுத்துக் கொண்டார் ஏ.எம். ராஜா. அதை, இன்பத் தீயாய் பற்ற வைத்தார் ரசிகர்களின் மனதில்.

முறையான இசைப்பயிற்சி. முழு ஈடுபாட்டுடன் தொழிற் பயிற்சி. கம்பீரமான குரலில் ஒரு மென்மை கலந்த பெண்மை. படிக்கட்டில் உருட்டிவிட்ட நாணயத்தைப்போல் நளினமான சத்தம். குழந்தையைத் தூங்க வைக்கும் தாயின் தாலாட்டில் உள்ள ஸ்பரிசம். இதுதான் ஏ.எம். ராஜா.

திரையுலகில் காதல் மன்னனாகக் கோலோச்சிய ஜெமினி கணேசனின் "வாய்மொழி"யாக வலம் வந்தார் ஏ.எம். ராஜா. முக்கோணக் காதல் கதையின் முதல்தர கதாநாயகனாக இருந்த இயக்குநர் ஸ்ரீதர்தான், பின்னணிப் பாடகரான ஏ.எம். ராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார். படம், கல்யாணப் பரிசு. காலமெல்லாம் மறக்க முடியாத இந்தக் கல்யாணப் பரிசுக்காக, ஏ.எம். ராஜா தந்த பாடல் பரிசு, இசை ரசிகர்களின் மனம் என்னும் அலமாரிகளில், இன்றும் அலங்காரமாக வீற்றிருக்கின்றன.

ஆண் குயில், பெண் குயில் மீது இயல்பாகக் கொள்ளும் ஈர்ப்பைப்போல, அழகியலைப் பாடலோடு குழைத்துத் தரும் ஏ.எம். ராஜாவும், பின்னணிப் பாடகி ஜிக்கியும் வாழ்க்கையிலும் இணைந்தனர். இந்த இசைக் குயில்கள், பாட்டு வானில் சிறகடித்தன.

வாழ்க்கை ஒருசிலருக்குத்தான் வசப்படுகிறது. பலரை தன் வலையில் வீழ்த்தி, தன்வசப்படுத்திக் கொள்கிறது. வாழ்க்கை ஒரு புரியாத புதிர். ஞானிகளும், அறிஞர்களும் இந்த புதிரை விடுவிக்கத்தான் படாதபாடு படுகிறார்கள். வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சியில் சிலர் வென்று விடுகிறார்கள். பலரைக் கொன்றுவிடுகிறது வாழ்க்கை.

பாரதியின் பாட்டுக் கனவான காணி நிலம். அங்கு, பத்து பதினைந்து தென்னை மரம். இருளை அணைக்கத் துடிக்கும் இளமையான நிலா வெளிச்சம். தலைகோதிவிட தளிர்போல் வளைகரம். இந்த நிழலில் மரணம் நேர்ந்தால்கூட மகிழ்ச்சிதான் என குதூகலிக்கும் மனநிலை. தேன் நிலவு படத்தில் வரும் 'நிலவும் மலரும் பாடுது' என்ற பாடல் தரும் அந்தத் தனிச்சுவை.

கலையே என்வாழ்க்கையில், சிற்பி செதுக்காத பொற்சிலையே, கண்மூடும் வேளையிலும், மாசில்லா உண்மைக் காதலே, உன்னைக் கண்டு நான் வாட, ராசி நல்ல ராசி, புரியாது புரியாது வாழ்க்‍கையின் ரகசியம் புரியாது, தனிமையிலே இனிமை காண முடியுமா? - இப்படி எண்ணிலடங்கா பாடல்கள். ரசிகர்களின் மனதில் ஏ.எம். ராஜா நிறைவேற்றிய தித்திக்‍கும் திரை இசை தீர்மானங்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தன் குழுவினருடன் ரயிலில் சென்னை திரும்பிக்‍ கொண்டிருந்தார் ஏ.எம். ராஜா. வள்ளியூர் என்ற இடத்தில் ரயிலை விட்டு கீழே இறங்கி மீண்டும் ரயில் ஏறியபோது ரயில் புறப்படவே, தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். புகழ் மணம் வீசிய புதையல் குரலை, புகைவண்டியின் சக்‍கரங்கள் அள்ளி அணைத்துக்‍ கொண்டு பூமிக்‍குள் அடக்‍கம் செய்தது. எவ்வழி வந்தாலும் வலி நிறைந்ததுதான் மரணம். ஏ.எம்.ராஜா போன்ற திரை இசை தீபத்தை அணைத்துவிட்ட மரணத்தை என்றுமே மன்னிக்‍க முடியாது.

உணர்வுகளை ஓங்கி உரக்கச் சொல்வது ஒருவகை. பூக்கூடை, தரையில் விழும்போது ஒலி எழுப்பாவிட்டாலும், பதற வைக்குமே ஒருவித உணர்வு. அதுபோல, தனது மென்மையான குரலில், ஆழமான உணர்வுகளை அழகான பாதையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றவர் ஏ.எம். ராஜா.

(பழம்பெரும் பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான ஏ.எம். ராஜா, பிறந்த நாள் (ஜூலை 1, 1929) இன்று)

- லாரன்ஸ் விஜயன், மூத்த பத்திரிகையாளர்
vijayanlawrence64@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE