கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு தனி வார்டு - ஹூமா குரேஷி திட்டம்

By செய்திப்பிரிவு

அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கேங்ஸ் ஆக் வாஸிப்பூர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹூமா குரேஷி. ரஜினிகாந்த் உடன்‘காலா’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்காக டெல்லியில் குழந்தைகளுக்கான பிரத்யேக கரோனா வார்டு ஒன்றை அமைக்க ஹூமா குரேஷி திட்டமிட்டுள்ளார். இதற்கு ப்ரீத் ஆஃப் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்காக பிரத்யேகமான முறையில் உருவாகும் இந்த கரோனா வார்டில் ஏறக்குறைய 30 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும் குழந்தைகளை கவரும் வகையில் சுவர்களில் கார்ட்டூன் படங்களும் வரையப்பட உள்ளன.

இது குறித்து ஹூமா குரேஷி கூறியிருப்பதாவது:

சேவ் தி சில்ட்ரன் அமைப்புடன் என்னுடைய ப்ரீத் ஆஃப் லைஃப் இயக்கம் இணைந்து இதுவரை 100க்கும் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகளை அமைத்துள்ளனர். இது போன்ற கடினமான காலகட்டத்தில் ஆதரவளித்த அனைவரும் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்த யுத்தம் இன்னும் முடிந்துவிடவில்லை. கரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுவதால் நாம் தயாராக இருக்கவேண்டும். இரண்டாம் அலையைப் போல இது மோசமாகும் வரை நாம் காத்திருக்க கூடாது. டெல்லி குழந்தைகளுக்காக நாங்கள் 30 படுக்கைகளுடன் கூடிய ஒரு பிரத்யேக வார்டை உருவாக்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE