ஓடிடியில் வெளியாகிறது 'அசுரன்' தெலுங்கு ரீமேக்

By செய்திப்பிரிவு

'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாராப்பா' ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரிக்க, வெங்கடேஷ் நாயகனாக நடித்து வந்தார். ப்ரியாமணி நாயகியாக நடித்துள்ளார். 'நாராப்பா' எனப் பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டாலும், மக்கள் எந்த அளவுக்குத் திரையரங்கிற்கு வருவார்கள் என்பது தெரியாமல் உள்ளது. இதனால், பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போது 'நாராப்பா' படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஜூலை மாதத்தில் வெளியாகும் எனவும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

'நாராப்பா' மட்டுமன்றி சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'த்ரிஷ்யம் 2' மற்றும் 'விராட பருவம்' ஆகிய படங்களையும் ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE