இதுபோன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள்: ரசிகரைக் கண்டித்த ராஷ்மிகா மந்தனா

By செய்திப்பிரிவு

இதுபோன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள் என்று ரசிகரின் செயலைக் கண்டித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

கரோனா அச்சுறுத்தல் காலத்தில் அனைத்து நடிகர்களும் வீட்டிலேயே முடங்கினார்கள். தங்களுடைய சமூக வலைதளத்தில் கரோனா தொடர்பான விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்தி வந்தார்கள். இதனைப் பயன்படுத்தி பல்வேறு ரசிகர்கள் நடிகர்களின் வீடுகளுக்குப் படையெடுத்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்தில் ராம்சரணைக் காண ரசிகர் ஒருவர் 700 கி.மீ. நடந்தே வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அதேபோன்று மற்றொரு சம்பவமும் நடைபெற்றது. தெலங்கானாவில் இருக்கும் ரசிகர் ஒருவர், ராஷ்மிகா மந்தனாவைக் காண கர்நாடகாவுக்கு நடந்தே சென்றுள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவின் வீட்டு முகவரியை விசாரித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா இருக்கும் வீட்டின் பகுதி ஊரடங்கில் இருப்பதாகவும், அதுமட்டுமன்றி அவரோ மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதாகவும் கூறி அனுப்பிவைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் வைரலானது. இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நண்பர்களே உங்களில் ஒருவர் மிக நீண்ட தூரம் பயணம் செய்து என்னைப் பார்க்க என் வீட்டுக்குச் சென்ற தகவல் என் கவனத்துக்கு வந்தது. தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள். உங்களைச் சந்திக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். நிச்சயம் ஒருநாள் உங்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன். ஆனால், இப்போதைக்கு என் மீது இங்கிருந்தே அன்பு காட்டுங்கள். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்".

இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE