ரஜினியின் அமெரிக்கப் பயணம்: விதிமுறைக்கு அப்பாற்பட்டவரா?- கஸ்தூரி கேள்வி

By செய்திப்பிரிவு

அமெரிக்காவுக்குப் பயணிக்க ரஜினிக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி என்று தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.

கரோனா அச்சுறுத்தலால் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்லாமல் இருந்தார் ரஜினி. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார் ரஜினி. அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலரும் சென்றுள்ளனர்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, சில காலம் ஓய்வு எடுத்துவிட்டுத்தான் இந்தியா திரும்பவுள்ளார் ரஜினி. இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. அதையும் மீறி எப்படிச் சிறப்பு அனுமதி பெற்று ரஜினி செல்லலாம் என்று கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவுகளில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினியின் அமெரிக்கா பயணம் தொடர்பாக, தனது ட்விட்டர் பதிவுகளில் கஸ்தூரி கூறியிருப்பதாவது:

"இந்தியாவிலிருந்து நேரடியாக வருபவர்களுக்கு அமெரிக்கா மே மாதமே தடை விதித்துவிட்டது. இதில் மருத்துவக் காரணங்களுக்கான பயணத்துக்காக எந்த விதிவிலக்கும் கிடையாது.

பிறகு எப்படி, ஏன் ரஜினிகாந்த் இந்தக் காலகட்டத்தில் பயணம் மேற்கொண்டார்? திடீரென அவர் அரசியலிலிருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி அவர்களே, தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.

தெளிவுக்காக: அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி இருக்கிறது. மற்ற நாடுகளிலிருந்து பயணப்படும் இந்தியர்களுக்குப் பயணப்பட அனுமதி இருக்கிறது. எனவே ரஜினியின் இந்தப் பயணம் கண்டிப்பாக மர்மமே.

இந்திய அரசிடமிருந்து மருத்துவக் காரணங்களுக்காக ரஜினி விதிவிலக்குக் கோரி அனுமதி பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். இது இன்னும் கவலைக்குரியது. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் சிகிச்சை தர முடியாத அளவுக்கு அப்படி என்ன அவருக்கு உடல் உபாதை? வழக்கமான பரிசோதனை என்றார்கள். மாயோ க்ளினிக் என்பது இருதய சிகிச்சைக்கானது.

இதைப் பற்றி நான் அதிகம் நினைக்க நினைக்க இது இன்னும் மோசமானதாகத் தோன்றுகிறது. ரசிகர்களே, ரஜினிகாந்துக்கு விதிமுறைகள் கிடையாது என்றெல்லாம் வந்து சொல்லாதீர்கள். சொல்வதற்கே மோசமான விஷயம் அது. இப்படிப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் மிக ஜாக்கிரதையாகச் சட்டத்தைப் பின்பற்றும் குடிமக்களாகவே இருக்க வேண்டியது முக்கியம்.

மற்ற அனைவரையும் பாதிக்கும் ஒரு பயணத் தடையை மீறி எப்படி ஒரு முக்கியஸ்தரும், அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் பயணப்பட்டுள்ளது என்பதைப் பற்றிக் கேட்பது சரியான, பொருத்தமான கேள்வியே. இதற்கு தர்க்கரீதியாக ஒரு விளக்கம் இருந்தால் நம் அனைவருக்கும் அது தெரியவரும். ரஜினிகாந்த் உட்பட எவருமே விதிமுறைகளுக்கும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல".

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த ட்விட்டர் பதிவுகள் ரஜினி ரசிகர்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் கஸ்தூரியைக் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE