எஸ்.பி.பி.க்காக ஒன்றிணைந்த தெலுங்கு இசைக் கலைஞர்கள்

By செய்திப்பிரிவு

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த வருடம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஜூன் 4ஆம் தேதி அன்று எஸ்பிபியின் 75-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவரது நண்பர்கள், இசைக் கலைஞர்கள், நடிகர்கள்,ரசிகர்கள் என பலரும் எஸ்பிபி குறித்த பல்வேறு நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 21 அன்று உலக இசை தினத்தை முன்னிட்டு எஸ்.பி.பிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தெலுங்கு இசைக்கலைஞர்கள் ‘பாலு சுரகானிகி ஸ்வரர்ச்சனா’ என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் எஸ்.பி.பி. சரண், எஸ்.பி.சைலஜா, மனோ, ஆர்.பி.பட்நாயக், ரேவந்த், ஸ்ரீ ராமசந்திரா, இசையமைப்பாளர் மணிஷர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு எஸ்பிபி குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டு அவரது பாடல்களையும் பாடினர்.

இந்நிகழ்ச்சி குறித்து எஸ்பிபியின் சகோதரியும், பாடகியுமான எஸ்.பி.சைலஜா கூறும்போது, ‘இந்த அழகிய நிகழ்வில் நானும் ஒரு அங்கமாக இருந்தது அவருடைய தங்கையாக மட்டுமின்றி அவரிடமிருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்ட ஒரு மாணவியாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

நானும் சரணும் பாலு அவர்களுடனான மகிழ்ச்சியான தருணங்களை இந்த நிகழ்வின் பகிர்ந்து கொண்டுள்ளோம். அதே போல பலரும் பகிர்ந்து கொண்டனர். தனது இசையால பலரது வாழ்வை அவர் தொட்டிருக்கிறார் என்பது அப்போதுதான் புரிந்தது’ என்றார்.

இந்த நிகழ்ச்சி விரைவில் ஜீ தெலுங்கு தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE