என் வாழ்க்கை நன்றாக இருந்ததுபோல நடித்துக் கொண்டிருந்தேன்: ப்ரிட்னி ஸ்பியர்ஸின் அதிர்ச்சிப் பதிவு

By ஏஎன்ஐ

கடந்த சில வருடங்களாக, தனது வாழ்க்கை மோசமாக இருந்தாலும், அது நன்றாக இருந்ததுபோல தான் வெளியுலகில் நடித்துக் கொண்டிருந்ததாக பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பதிவிட்டுள்ளார்.

பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த 13 வருடங்களாகப் பாதுகாவல் ஏற்பாட்டில் வாழ்ந்து வந்தார். 2008ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஏற்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும், தனது வாழ்க்கையின் கட்டுப்பாடு தனது தந்தையின் கைகளில் இருக்கக் கூடாது, தன் வாழ்க்கையைத் தான் வாழவேண்டும் என்று நீண்ட காலமாகவே ப்ரிட்னி ஸ்பியர்ஸ் கோரி வந்துள்ளார்.

கடந்த 23ஆம் தேதி அன்று இதுகுறித்த நீதிமன்ற விசாரணையில், இந்த ஏற்பாட்டால் கடந்த 13 வருடங்களாகத் தான் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது குறித்த பல அதிர்ச்சிகரமான தகவல்களை ஸ்பியர்ஸ் பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாசகம் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பகிர்ந்துள்ளார். இதில், "உங்கள் குழந்தைகள் புத்திசாலியாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு நிறைய தேவதைக் கதைகளைப் படித்துக் காட்டுங்கள். அதிக புத்திசாலியாக இருக்க வேண்டுமென்றால் இன்னும் அதிகமாக தேவதைக் கதைகளைப் படித்துக் காட்டுங்கள்" என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கும் ஸ்பியர்ஸ், "நான் உங்களுக்கு ஒரு சின்ன ரகசியம் சொல்ல விரும்புகிறேன். நம் அனைவருக்குமே நமது வாழ்க்கை, தேவதைக் கதைகளில் இருப்பதைப் போல இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும் என்று நான் நம்புகிறேன். எனது வாழ்க்கை அற்புதமாக இருப்பதாகக் காட்டி நானும் பதிவிட்டிருக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் அதற்காகத்தான் போராடுகிறோம் என்று நினைக்கிறேன்.

இது என் அம்மாவின் சிறந்த குணங்களில் ஒன்று. ஒரு நாள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவரது குழந்தைகளுக்காக, எல்லாம் சரியாக இருப்பதைப் போலவே அம்மா நடிப்பார். இதை நான் உங்களின் கவனத்துக்குக் கொண்டுவரக் காரணம், என் வாழ்க்கை கச்சிதமாக இருப்பதாக யாரும் நினைக்கக் கூடாது என்பதால் தான். கண்டிப்பாக என் வாழ்க்கை கச்சிதமாக இல்லை.

இந்த வாரம் செய்திகளில் என்னைப் பற்றிப் படித்திருக்கும்போதும் உங்களுக்கு இது தெரிந்திருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக நான் நலமாக இருந்ததைப் போல நடித்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் எனக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்ல எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. எனது சுய பெருமை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

ஆனால், யாருக்குத்தான் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை உற்சாகமாகக் காட்டிக்கொள்ளப் பிடிக்காது, சொல்லுங்கள்? நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள். நான் நலமாக இருந்ததாக நடித்தது எனக்கு உதவியிருக்கிறது. எனவே, இன்று இந்த வாசகத்தைப் பகிரலாம் என்று நினைத்தேன். எனது இருப்பைப் பகிர்ந்து கொள்ள, உற்சாகமான வெளித்தோற்றத்தைக் காட்ட இன்ஸ்டாகிராம் எனக்கு உதவியிருக்கிறது.

நான் மோசமான சூழலில் இருந்தாலும் எனது இருப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை இன்ஸ்டாகிராம் உணர்த்தியது. எனவே நான் இப்போதும் இன்னும் அதிகமான தேவதைக் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்" என்று எழுதியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE