இரண்டு வருடப் பொறியியல் படிப்புக்குப் பின் நான் எடுத்த நல்ல முடிவு: ஃபகத் பாசில்

By செய்திப்பிரிவு

தனது கல்லூரிக் காலம் குறித்தும், பொறியியல் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு கலைகள் பக்கம் கவனம் திருப்பியது குறித்தும் நடிகர் ஃபகத் பாசில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ஃபகத் பாசிலின் 'மாலிக்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கரோனா நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து, 'ஸி யூ ஸூன்', 'ஜோஜி', 'இருள்' என மூன்று திரைப்படங்கள் ஃபகத்தின் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கரோனா நெருக்கடியால் மீண்டும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்கிற நிச்சயமில்லாத சூழலில் ‘மாலிக்’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடத் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் முடிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தன் ரசிகர்களிடம் படம் ஏன் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறித்து ஃபகத் பாசில் நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் தனது கல்லூரிப் படிப்பு குறித்துப் பகிர்ந்துள்ளார்.

"எனது பொறியியல் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டது குறித்து நான் எனது சில பேட்டிகளில் பேசியிருக்கிறேன். அமெரிக்காவில் கல்லூரியில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு உங்கள் பாடங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள முடியாது. அப்படிச் செய்தால் உங்களுக்கான கல்வி உதவித்தொகை கிடைக்காது.

எனவே, எனது கல்லூரி வாழ்வில் இரண்டாவது ஆண்டுக்குப் பிறகு, கல்லூரியில் எனது ஆலோசகர் என்னை கவுன்சிலிங்குக்கு அழைத்தார். ஏனென்றால் எனது மதிப்பெண்கள் மோசமாகக் குறைந்து வந்து கொண்டிருந்தன. இந்த உரையாடலின் போது, நான் ஒரு தோல்வியடைந்த நடிகன்/தனி மனிதன், எனது சுய விருப்பத்திலிருந்தே நான் தப்பியோடிக் கொண்டிருக்கிறேன், பொறியியல் படிப்பை நான் விரும்பவில்லை என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் எனக்கு எப்படியோ வந்தது.

எனக்குப் பிடிக்காத ஒன்றை நான் தொடர்ந்து கற்றிருந்தால் கற்றலே எனக்குப் பிடிக்காமல் போயிருக்கும். என் கல்லூரி டீனுக்கு என் ஆலோசகர் கடிதம் எழுதினார். அதன் பிறகு நான் கலைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டேன். அமெரிக்காவில் ஆறு வருடம் இருந்துவிட்டு, கையில் பட்டமின்றி வீடு திரும்பியபோது நான் ஒரு விஷயத்தை நினைத்து சந்தோஷப் பட்டேன். என்னிடம் பட்டப்படிப்பு இல்லை என்பதால் என்னால் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்க முடியும் என்கிற சுதந்திரம் எனக்கு இருந்தது" என்று ஃபகத் பாசில் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE