’ராவணன்’ வெளியான நாள்: காலம் கடந்து கொண்டாடப்படும் மணிரத்னம் படம்  

By ச.கோபாலகிருஷ்ணன்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம்-ஐஸ்வர்யா ராய்-பிருத்விராஜ் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த ‘ராவணன்’ திரைப்படம் வெளியான நாள் இன்று (2010 ஜூன் 18).

தமிழ்த் திரைப்படங்களில் பிரதானமாக இயங்கினாலும் இந்தியா முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களையும் திரைத்துறை பிரபலங்களையும் கவர்ந்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர் மணிரத்னம். 1990களில் அவருடைய இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’, ‘பம்பாய்’ உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழில் எடுக்கப்பட்டாலும் அவற்றின் இந்தி மொழி மாற்ற வடிவங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. இதனால் நேரடி ’தில் சே’, ‘குரு’ உள்ளிட்ட நேரடி இந்திப் படங்களை இயக்கினார் மணிரத்னம். இவற்றில் தொழிலதிபர் அனில் அம்பானியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘குரு’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

’குரு’வுக்கு முன்பே தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் வெவ்வேறு நடிகர்களை வைத்து எடுக்கப்படும் இரு மொழிப் படங்களைத் தொடங்கிவிட்டார் மணிரத்னம். 2004இல் தமிழில் ‘ஆய்த எழுத்து’ என்றும் இந்தியில் ‘யுவா’ என்றும் வெளியான இருமொழிப் படம் வணிக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நகர்ப்புற இளைஞர்களைக் கவர்ந்தது. ‘ராவணன்’ மணிரத்னத்தின் இருமொழிப் பயணத்தின் அடுத்த கட்டம் என்று சொல்லலாம். ஒரே நேரத்தில் தமிழில் ‘ராவணன்’, இந்தியில் ‘ராவண்’ என்று உருவானது இந்தப் படம். தமிழ்ப் பதிப்பில் ராவணனாக நடித்த விக்ரம், இந்தியில் ராவணனை வேட்டையாடத் தலைபடும் காவல்துறை அதிகாரியாக நடித்தார்.

ஒரு படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அதன் மறு ஆக்கத்தில் அதே கதையின் வேறோரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதற்கு இந்திய சினிமாவில் முன்னுதாரணங்கள் உண்டு. ஆனால், ஒரே நேரத்தில் ஒரே கதையைக் கொண்டு உருவான இருமொழிப் படங்களில் ஒரே நடிகர் முற்றிலும் எதிர்நிலைகளில் உள்ள இருவேறு முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தது இதுவே முதல் முறை. விக்ரமின் பன்முக நடிப்புத் திறமை மீது மணிரத்னத்துக்கு இருந்த அபார நம்பிக்கையே இந்தப் புதிய முயற்சிக்கு வித்திட்டது. இந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

தமிழில் மலைவாழ்பகுதி மக்களின் உரிமைகளுக்காக வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்துப் போராடும் தலைவனாகவும், இந்தி பதிப்பில் அந்தத் தலைவனை வீரத்தால் வெல்ல முடியாமல் பிறகு மதியூகத்தின் சதியால் வெல்லும் காவல்துறை அதிகாரியாகவும் தோற்றம், உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்பு என அனைத்திலும் இரு வேறு நபர்களாக உருமாறியிருந்தார் விக்ரம்.

இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் தீயவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் நியாயங்களையும் நல்லவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களின் மறு பக்கத்தையும் முன்வைத்த கதைதான் 'ராவணன்'. ராவணனால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட சீதை, ராவணன் தரப்பு நியாயங்களைப் புரிந்துகொள்ளவும் அவளுக்கு அவன் மீது மதிப்புகொள்ளவும் செய்தால் என்னவாகும் என்னும் மாறுபட்ட கற்பனையின் நீட்சிதான் இந்தப் படம்.

திரைக்கதையில் மணிரத்னம் படங்களுக்கேயான அடுக்குகளும் நிதானமும் இருந்தன. சுஹாசினியின் வசனங்கள் தக்க துணைபுரிந்தன. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் பிரம்மாண்ட அருவிகளும் மலை முகடுகளும் இருள் நிறைந்த அடர்காடுகளும் பார்த்தவுடன் குளிரை உணரச் செய்யும் நீரோடைகளும் கண்களுக்கு விருந்தாகின. ’உசுரே போகுதே’, ‘கோடு போட்டா’ உள்ளிட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. தமிழ்ப் பதிப்பில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த பிருத்விராஜ் விக்ரமுடன் போட்டிபோட்டு நடித்திருந்தார்.

இவ்வளவு சாதக அம்சங்கள் இருந்தாலும் தமிழ், இந்தி என இருமொழிகளில் உருவான இந்தப் படத்தில் கதை நிகழும் களம், இடங்கள், சில நடிகர்களின் முகவெட்டு, பேச்சு வழக்கு, பின்னணியில் வெளிப்படும் பண்பாட்டு அம்சங்கள் ஆகியவை முற்றிலும் தமிழுக்கு அந்நியமாக இருந்தன. இதனால் படமும் தமிழ் ரசிகர்கள் பலருக்கு அந்நியமாகிவிட்டது. விமர்சகர்களிடமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பிந்தைய பேட்டி ஒன்றில் மணிரத்னம் இந்த விஷயத்தில் தன்னுடைய முயற்சி தவறாகிவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

ஆனால், இந்திக்காக இதுபோன்ற சமரசம் செய்யப்பட்டிருந்தாலும் இந்தப் படத்தின் இந்திப் பதிப்பு தோல்வியுற்றது. படத்தின் மற்ற நிறைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ் ரசிகர்கள் ‘ராவணன்’ படத்துக்கு வணிக வெற்றியை அளித்தார்கள். 2010ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களில் ஒன்றாக ஆனது. இருந்தாலும் மணிரத்னம்- விக்ரம் முதல் முறையாக இணைந்திருக்கிறார்கள் என்பதால் உருவான எதிர்பார்ப்புக்கு ஈடுசெய்வதாக அந்த வெற்றி அமையவில்லை.

ஆனால், சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் ‘ராவணன்’ படத்தை ரசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. படம் வெளியாகி பத்தாண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இணையதளங்களில் இந்தப் படம் அதிக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. யூட்யூபில் ’ராவணன்’ முழுப் படமும் காணக் கிடைக்கிறது. அதைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய ரசனை மாற்றத்துக்கு ஏற்ப பல படத்தில் உள்ள விஷயங்கள் இப்போது பலரும் கவனிக்க மறந்த அல்லது போதுமான அளவு பாராட்டாத சிறப்பு அம்சங்களாக அலசப்படுகின்றன. படத்தின் பிரம்மாண்ட காட்சியமைப்புகள், ஒளிப்பதிவு நுணுக்கங்கள் அதிகமாக சிலாகிக்கப்படுகின்றன. மணிரத்னம் இயக்கிய படங்களில் வெளியான காலத்தைவிட ஆண்டுகள் பல கடந்தபின் ரசிக்கப்படும் படங்களில் ஒன்றாகியிருக்கிறது ’ராவணன்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE