முதல் சந்திப்பு; நஸ்ரியாவுடனான பெங்களூரு நாட்கள்: ஃபகத் பாசில் பகிர்வு

By செய்திப்பிரிவு

தான் நஸ்ரியாவைக் காதலித்தது குறித்தும், தங்களின் முதல் சந்திப்பு, திருமண வாழ்க்கை குறித்தும் நடிகர் ஃபகத் பாசில் எழுதியுள்ளார்.

ஃபகத் பாசிலின் 'மாலிக்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கரோனா நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து, 'ஸி யூ ஸூன்', 'ஜோஜி', 'இருள்' என மூன்று திரைப்படங்கள் ஃபகத்தின் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கரோனா நெருக்கடியால் மீண்டும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்கிற நிச்சயமில்லாத சூழலில் 'மாலிக்' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடத் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் முடிவு செய்துள்ளார். எனவே, தன் ரசிகர்களிடம் படம் ஏன் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறித்து ஃபகத் பாசில் நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதில் தனது கல்லூரி வாழ்க்கை, தனக்கு ஏற்பட்ட விபத்து ஆகியவை குறித்துப் பகிர்ந்துள்ளார். மேலும் மனைவி நஸ்ரியாவைச் சந்தித்த சூழல் குறித்தும் இதில் குறிப்பிட்டுள்ளார்.

" 'பெங்களூர் டேஸ்' படம் வெளியாகி 7 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. பல நல்ல நினைவுகளைக் கிளறி விடுகிறது. நஸ்ரியாவைப் பார்த்ததும் காதலில் விழுந்தது, அவருடன் எனது பயணத்தைத் தொடங்கியது எல்லாம். கைப்பட கடிதம் எழுதி வெளியே போகலாமா என்று கேட்டேன். அதனுடன் ஒரு மோதிரத்தையும் தந்தேன். அவர் சரி என்று சொல்லவில்லை. முடியாது என்றும் சொல்லவில்லை.

'பெங்களூர் டேஸ்' படத்தோடு இன்னும் இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் 3 படங்களின் படப்பிடிப்புக்கு மாறி மாறிச் செல்வது தற்கொலைக்குச் சமமானது. 'பெங்களூர் டேஸ்' படப்பிடிப்புத் தளத்துக்கு எப்போது செல்வோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். நஸ்ரியாவைச் சுற்றி இருப்பது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், எனது எண்ணங்கள் சீரான ஓட்டத்தில் இல்லை.

இப்போது இதை நான் சொல்லும்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை, ஆனால், அந்தக் கட்டத்தில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக நஸ்ரியா நிறைய விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. அது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தது. அதனால் நான் தொடர் குழப்பத்தில் இருந்தேன்.

அந்தக் கட்டத்தில், அவ்வளவுதான் என் வாழ்வில் எல்லாம் முடிந்தது, எனக்கு அவ்வளவு வலிமை கிடையாது என்று நான் நினைத்தபோதுதான், நஸ்ரியா, "ஹலோ மெத்தட் நடிகரே, நீங்கள் யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நம்மிடம் இருப்பதே ஒரே ஒரு எளிமையான வாழ்க்கை. உங்களுக்குத் தேவையான எல்லோரையும், எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.

எங்களுக்குத் திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. டிவி ரிமோட்டை பாத்ரூமில் வைத்துவிட்டால், இன்றும் அதே உறுதியோடு, "நீங்கள் யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று என்னைக் கேட்கிறார். 'பெங்களூர் டேஸ்' திரைப்படம் மூலம் எனது தகுதிக்கு அதிகமாகவே எனக்கு ஒன்று கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். .

நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுகிறோம். ஒருவருக்கொருவர் அதிக செல்லம் கொடுத்துக் கெடுத்துக் கொள்கிறோம். ஒருவரை ஒருவர் ஆதரிக்கிறோம். என்ன நடந்தாலும் நாங்கள் இருவரும் ஒரு அணியாக இருக்கிறோம்.

எனது வாழ்வின் அத்தனை சின்ன சின்ன சாதனைகளுமே நஸ்ரியாவுடன் எனது வாழ்க்கையை நான் பகிர ஆரம்பித்த பிறகுதான். இதில் எதுவுமே எனது தனி முயற்சி இல்லை என்று எனக்குத் தெரியும். நஸ்ரியா எங்கள் இருவர் குறித்து நேர்மறையாக உணராமல் போயிருந்தால் என் வாழ்க்கை என்னவாக ஆகியிருக்கும் என்று நான் யோசிக்கிறேன்" என்று ஃபகத் பாசில் இந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE