மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சி: தொகுப்பாளராகும் தமன்னா

By பிடிஐ

'மாஸ்டர் செஃப் இந்தியா' நிகழ்ச்சியின் தெலுங்குப் பதிப்பை நடிகை தமன்னா தொகுத்து வழங்கவிருக்கிறார். இதன் மூலம் தொலைக்காட்சியில் தமன்னா அடியெடுத்து வைக்கிறார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சி 'மாஸ்டர் செஃப்'. இந்நிகழ்ச்சி 'மாஸ்டர் செஃப் இந்தியா' என்கிற பெயரில் நம் நாட்டில் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் இந்தி உரிமையை ஸ்டார் இந்தியா தரப்பு வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 தென்னிந்திய மொழி உரிமைகளையும் சன் டிவி நெட்வொர்க் வாங்கியுள்ளது.

ஏற்கெனவே தமிழில் விஜய் சேதுபதியும், மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் இந்த நிகழ்ச்சியின் அந்தந்த மொழி வடிவங்களைத் தொகுத்து வழங்கவுள்ளனர் என்று அறிவிப்பு வெளியானது. தற்போது தெலுங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தமன்னா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் தமன்னா, "படப்பிடிப்பில் தயாராகவுள்ள அத்தனை சுவை மிகுந்த உணவுகளையும் ருசித்துப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மிகவும் உற்சாகமானதாகவும், மனநிறைவு தருவதாகவும் இந்த நிகழ்ச்சி இருக்கப் போகிறது. எனக்கு என்றுமே சமையலில் ஆர்வம் இருந்துள்ளது. அப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்பு வந்திருப்பது உற்சாகத்தைத் தருகிறது" என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பிடாடி என்கிற இடத்தில் இருக்கும் படப்பிடிப்பு அரங்கில் இந்த நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 28 பகுதிகளாக உருவாகும் இந்த நிகழ்ச்சியில் முதல் மற்றும் கடைசிப் பகுதிகள் 90 நிமிடங்களும், மற்ற பகுதிகள் 1 மணி நேரமும் ஓடும். அடுத்த மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. .

கடந்த மாதம், ’நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் மூலம் நடிகை தமன்னா ஓடிடி தளத்தில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE