கங்கணா உரிய விவரங்களை வழங்கவில்லை: பாஸ்போர்ட் புதுப்பித்தல் பிரச்சினையில் நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

தனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க மறுத்த விவகாரத்தை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை கங்கணா ரணாவத் தொடர்ந்திருந்த வழக்கை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து நடிகை கங்கணாவும் அவரது சகோதரி ரங்கோலியும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை ட்விட்டரில் பகிர்ந்தனர். இதனிடையே, கரோனா தொற்றுப் பிரச்சினையில் இஸ்லாமியர்களைக் குற்றம் சாட்டியும் ட்வீட் செய்திருந்தனர்.

கங்கணாவும், ரங்கோலியும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டி, கலவரத்துக்கு வழிவகுப்பதாகவும், அவரவர் மதங்களை அவமதிப்பதாகவும் சையத் என்பவர் தேசதுரோக வழக்குத் தொடர்ந்திருந்தார். இவர் பாலிவுட்டில் உடற்பயிற்சி நிபுணராகவும், நடிகர் தேர்வு இயக்குநராகவும் இருக்கிறார். இந்த வழக்கில் நீதிமன்றம் தண்டனை எதுவும் வழங்காமல் கங்கணாவுக்கும், ரங்கோலிக்கும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், இந்த வழக்கு முடிவு குறித்து ஆவணங்கள் எதுவும் இல்லை.

இது தவிர, கங்கணாவுக்கும் மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் சிவசேனா அரசுக்கும் கருத்து மோதல் வலுத்தது. இதனால் கங்கணாவின் அலுவலகக் கட்டிடத்தில் விதிமீறல்கள் இருப்பதாகக் கூறி மும்பை மாநகராட்சி அவரது அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்த சம்பவமும் நடந்தது.

இந்நிலையில் இந்த மாதம், தனது 'தாக்கட்' படத்தின் படப்பிடிப்புக்காக கங்கணா ரணாவத் வெளிநாடு செல்லவிருந்தார். இதனால் தனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகியுள்ளார். ஆனால், கங்கணா மீது இன்னும் நீதிமன்றத்தில் தேசதுரோக வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி அவரது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க அலுவலகம் மறுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரித்து விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கங்கணா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய விவரங்களை கங்கணா தரப்பு வழங்கவில்லை என்றும், இதில் எதிர்த்தரப்பாக பாஸ்போர்ட் அலுவலகம் சேர்க்கப்படவில்லை என்பதால் யாருக்கு அறிவுறுத்தல் வழங்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கங்கணாவின் படப்பிடிப்பு இதனால் தாமதமாகிறது என்றும், இதில் நிறைய பண முதலீடும் உள்ளது என்றும் கங்கணாவின் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், திரைப்படப் படப்பிடிப்புகளை மாற்றிவைத்துக் கொள்ளலாம், சிறிய தாமதத்தால் ஒன்றும் ஆகிவிடாது என்று கூறிய நீதிபதிகள் ஜூன் 25ஆம் தேதிக்கு இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இன்னொரு பக்கம், கடந்த வருடம் மகாராஷ்டிர அரசை விமர்சித்துப் பேசியதால் தான் தன் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் இப்படித் தொடர்வதாகக் குற்றம் சாட்டி கங்கணா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், பாஜக ஆட்சியில் சகிப்பின்மையைப் பற்றிப் பேசிய ஆமிர் கான் மீது அரசு வன்மம் காட்டவில்லை, ஆனால் தன் விஷயத்தில் மட்டும்தான் துன்புறுத்தப்படுவதாகவும் கங்கணா பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE