முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்: தயாரிப்பாளர் தாணு வழங்கினார்

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தயாரிப்பாளர் தாணு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தலால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியுள்ளதால், சில தளர்வுகளுடன் ஊரடங்கினை தமிழக அரசு நீட்டித்துள்ளது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு தொடர்கிறது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக அரசும் பொதுமக்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறது. இதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்காக அரசியல், சினிமா பிரபலங்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் உள்ளிட்ட பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகிறார்கள். நேற்று ( ஜூன் 15) நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார்.

அந்த வகையில் தயாரிப்பாளர் தாணு இன்று (ஜூன் 16) முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். அத்துடன் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டும் வகையில் கடிதம் ஒன்றையும் இணைத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவுகளும் தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலைநோக்குப் பார்வையும், பெருந்தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்புநிலை மக்களுக்காக நீங்கள் படைத்த பசியாற்றும் திட்டங்கள் உங்களுக்கும், உங்கள் சந்ததிகளுக்கும் தேக பலம், மனோபலத்துடன் நீண்ட ஆயுளை அள்ளித் தரும். உங்கள் தர்ம சிந்தனைக்கு, சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக 10 லட்சம் ரூபாயை இணைத்துள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்''.

இவ்வாறு தாணு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE