வாரிசுகள் தயாரிப்பில் உருவாகும் சலீம் - ஜாவேத் ஆவணப்படம்

By செய்திப்பிரிவு

எக்ஸல் என்டர்டெய்மென்ட், சல்மான் கான் மற்றும் டைகர் பேபி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, எழுத்தாளர்கள் இணை சலீம் மற்றும் ஜாவேத் பற்றிய ஆவணப்படம் உருவாகிறது.

சலீம் கானும் - ஜாவேத் அக்தரும் இணைந்து பல பாலிவுட் படங்களில் கதாசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். ’ஷோலே’, ’யாதோன் கி பாராத்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் இந்தக் கூட்டணி எழுதியதே. இவர்களின் எண்ணற்ற திரைப்படங்கள், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றன.

இவர்களின் பெயர்களைத் தாங்கிய போஸ்டர்கள் வந்த காலம் பாலிவுட்டில் உண்டு. 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த இணை பிரிய முடிவெடுத்தது. ஜாவேத் அக்தர் பாலிவுட்டின் முன்னணிப் பாடலாசிரியர்களில் ஒருவராக ஆனார். சலீம் கான் 10 திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். சலீம் கானின் மகன் சல்மான் கான், அர்பாஸ் கான், சொஹைல் கான் என அனைவருமே பாலிவுட்டில் கவனம் பெற்றவர்கள். ஜாவேத் அக்தரின் மகள் ஸோயா அக்தர், மகன் ஃபர்ஹான் அக்தரும் பாலிவுட்டில் பெயர் பெற்றுள்ளனர்.

பாலிவுட்டில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் கதாசிரியர் இணை என்கிற பெருமை சலீம்-ஜாவேத் இருவருக்கும் உண்டு. தற்போது இவர்கள் இருவரது பயணத்தைச் சொல்லும் ஆவணப் படம் ஒன்று உருவாகிறது. இதை சலீம் கானின் மகன் சல்மான் கான், ஃபர்ஹான் அக்தரின் எக்ஸல் என்டெர்டெய்மென்ட், ஸோயா அக்தரின் டைகர் பேபி புரொடக்‌ஷன்ஸ் என வாரிசுகள் இணைந்து தயாரிக்கின்றனர்.

'ஆங்ரி யங் மேன்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆவணப் படத்தை நம்ரதா ராவ் இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE