கமல்ஹாசனின் பிரம்மாண்ட வெற்றித் திரைப்படமான 'தசாவதாரம்' ஜூன் 13, 2008 அன்று வெளியானது. படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் விதமாக அந்தப் படம் உருவான விதம், அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்திய சினிமாவில் முதல் முறையாகப் பத்து வேடங்களில் நடித்திருந்த கமல்.
கமல்ஹாசனின் நெடிய பதிவின் முக்கியமான சில பகுதிகள்:
இயக்குநர்களுக்குப் புரியாத கதை
12ஆம் நூற்றாண்டின் சோழர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சைவ-வைணவ சச்சரவுகளில் தொடங்கி 2004இல் நிகழ்ந்த சுனாமி ஆழிப் பேரலை வரை பல நூற்றாண்டு கால இடைவெளியையும் இடையில் தமிழகம், அமெரிக்கா, ஜப்பான் என பூமிப்பந்தின் கண்டங்களையும் கடந்து பயணிக்கும் கதை 'தசாவதாரம்'. இந்த உலகில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மூலைகளில் நடைபெறும் தொடர்பற்றதாகத் தோன்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு என்னும் பட்டாம்பூச்சி விளைவுக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தக் கதையை எழுதியிருந்தார் கமல்.
» பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள ராப் பாடகர்: பதிவை லைக் செய்த நடிகை பார்வதி மன்னிப்பு
» 190 நாடுகள், 17 மொழிகள்: 'ஜகமே தந்திரம்' வெளியீட்டில் பிரம்மாண்டம்
இந்தக் கதையைப் பல முன்னணி இயக்குநர்களிடம் கமல் கூறினாலும் அவர்கள் அந்தக் கதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறி அதை இயக்க மறுத்துவிட்டார்கள். கமலுடன் நகைச்சுவைப் படங்களில் மட்டுமே பணியாற்றியிருந்த கே.எஸ்.ரவிகுமார் மாபெரும் கற்பனையையும் வருடக் கணக்கிலான கடின உழைப்பையும் கோரும் இந்தக் கதையை இயக்க முன்வந்தது கமலுக்கே ஆச்சரியம்தான். ஆனால், ரவிகுமாருக்கு இந்தக் கதையைக் கேட்டவுடன் அது வெற்றிபெறும் என்று நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
முக்தா சீனிவாசனும் சுஜாதாவும் அளித்த உற்சாகம்
திரைக்கதை எழுதுவதற்கு முன்பாக மூத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசனிடம் கதையைக் கூறி அவருடைய கருத்தைப் பெற்றார் கமல். காரணம் முக்தா சீனிவாசன் ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் என்கிறார் கமல். கதையைக் கேட்ட முக்தா, இந்தப் படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கமல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதை கமல் தன்னுடைய குழந்தையைப் போல் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து ஒரு திரைக்கதையை அலசுவதில் வல்லுநர்கள் என்று தான் கருதும் எழுத்தாளர்கள் சுஜாதா, மதன், கிரேஸி மோகன், நடிகர்-இயக்குநர் ரமேஷ் அரவிந்த் ஆகியோரிடம் திரைக்கதையை விவரித்திருக்கிறார் கமல். அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் விளக்கம் அளித்திருக்கிறார். மற்ற மூவருக்கும் இந்தப் படத்தின் கரு, அளவு, பொருட்செலவு அனைத்தும் புதுமையானது என்பதால் சற்று தயக்கம் இருந்துள்ளது. ஆனால், இந்தத் திரைக்கதையுடன் முன்னகர்வதற்குக் கமலுக்கு உற்சாகமளித்தவர் சுஜாதா.
அமெரிக்காவில் மேக்கப் டெஸ்ட்
ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தின் தயாரிப்பாளர் என்று உறுதியானது. படத்தில் கமலின் பத்துத் தோற்றங்கள் மற்றும் அவற்றின் மேக்கப்புக்கான சோதனைக்கு மட்டும் 21 நாட்கள் அமெரிக்காவில் முகாமிட வேண்டும் என்று கேட்டிருந்தால் எந்த ஒரு தயாரிப்பாளரும் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்கிறார் கமல். 21 நாட்களும் ஒரு ஆய்வகத்தில் கடுமையான உழைப்புக்கிடையே அந்தப் பரிசோதனை நடைபெற்றிருக்கிறது. கமலுடன் 'இந்தியன்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் மேக்கப் கலைஞரான மைக்கேல் வெஸ்ட்மோர் இந்தப் படத்திலும் பணியாற்றினார். மேக்கப்புக்கு மட்டுமல்லாமல் அவற்றுக்கான ஃபோட்டோ ஷூட் நடத்தவும் அவர் உதவ வேண்டியிருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு தோற்றம்/ மேக்கப்பை புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. இதைப் பார்த்த இயக்குநர் ரவிகுமார் உடனடியாக நாள் ஒன்றுக்கு 250 டாலர் கட்டணத்தில் ஒரு புகைப்படக் கலைஞரைப் பணியமர்த்திவிட்டார்.
கமல் விட்டுக்கொடுத்த உரிமை
இவையெல்லாம் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமாகின. ஆனால், இறுதிக் காட்சியைச் சுனாமி பின்னணியில் படமாக்குவதற்குத் திட்டமிட்டதைவிட மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டது. இன்று 20 கோடி ரூபாயும் 30 கோடி ரூபாயும் திரட்டுவது சகஜமாகியிருக்கலாம். ஆனால், 'தசாவதாரம்' உருவான காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அதனால் சுனாமி இல்லாமல் படமாக்கும் வகையில் படத்தின் இறுதிக் காட்சியை மாற்றியமைக்க முன்வந்தார் கமல். ஆனால், அப்படிச் செய்தால் படத்தின் பட்டாம்பூச்சி விளைவுக் கோட்பாடு நீர்த்துப் போய்விடும். திரைக்கதையை முழுமையாக உள்வாங்கியிருந்த படத்தின் இயக்குநர் ரவிகுமார் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இறுதிக் காட்சியைத்தான் படமாக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இறுதியில் கமல் படத்தின் விற்பனையில் தனக்கிருந்த சில உரிமைகளைத் தயாரிப்பாளருக்கு விட்டுக்கொடுத்து முன்பே திட்டமிட்டிருந்தபடி அந்தக் காட்சியை எடுத்திருக்கிறார்கள்.
11ஆவது அவதாரம்
இயக்குநர் ரவிகுமார், தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், ஆடை வடிவமைப்பாளர் கெளதமி, கலை இயக்குநர்கள் தோட்டா தரணி, பிரபாகர், பாடல்களுக்கு இசையமைத்த ஹிமேஷ் ரெஷமய்யா, பின்னணி இசைமையத்த தேவி ஸ்ரீ பிரசாத், ஃப்ளெச்சர், சிங்க நரஹஸி, கோவிந்த் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முற்றிலும் வெவ்வேறு வகையிலான சண்டைக் காட்சிகளை வடிவமைத்த ஸ்டண்ட் இயக்குநர்கள், என அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார் கமல். இவர்களில் யார் இல்லை என்றாலும் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது என்கிறார். குறிப்பாக மேக்கப் கலைஞர் வெஸ்ட்மோருக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார். சிங்கென் நரஹசி என்னும் ஜப்பானிய தற்காப்புக் கலை வல்லுநர் கதாபாத்திரத்துக்காகத் தன்னுடைய உருண்டையான கண்களைத் தட்டையானவையாக மாற்றியது தன்னை பிரமிக்கவைத்ததாகக் கூறியிருக்கிறார். படத்தில் தனக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவு வெஸ்ட்மோருக்கும் பங்கிருப்பதாகக் கூறியிருக்கும் கமல், அவரை 11ஆவது அவதாரம் என்றும் வர்ணித்திருக்கிறார்.
கைகொடுத்த 'மருதநாயகம்' அனுபவம்
12ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ஆட்சிக் காலத்தில் நடைபெறும் காட்சிகளை வடிவமைப்பதில் கமலின் பங்களிப்பே முதன்மையானது. 'மருதநாயகம்' அனுபவத்திலிருந்து அவை பற்றித் தெரிந்துகொண்டிருந்ததால் கமல் அவற்றைச் செய்ய முடிந்தது. படத்தில் குலோத்துங்க மன்னனாக வரும் நெப்போலியன் யானை மீது அமர்ந்திருக்கும்போது கீழே இரண்டு காவலர்கள் நின்றுகொண்டிருப்பார்கள். யானையில் அமர்ந்திருக்கும் மன்னனின் பாதுகாப்புக்காக யானைக்கு அருகில் இருபுறமும் நிற்கக் காவலர்களை நிறுத்திவைப்பது அந்தக் கால வழக்கம். இதை அப்படியே அந்தக் காட்சியில் கொண்டுவந்திருப்பார் கமல்.
இந்தப் பத்து நிமிடக் காட்சிகளுக்காக ரூ.2.5 கோடியில் செட் போட்டுப் படமாக்கப்பட்டுள்ளது. அந்த செட்டில் மட்டும் பணியாற்றிவிட்டுக் கலை இயக்குநர் சமீர் சந்தா விடைபெற்றுக்கொள்ள அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்திருக்கிறார் தோட்டா தரணி. விமான நிலையக் காட்சிகளுக்கு மட்டும் பிரபாகர் கலை இயக்கம் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜீவா உள்ளிட்ட பல முக்கியக் கலைஞர்களை இந்தப் படத்தில் பங்கேற்க வைக்க முயன்றார் கமல். ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்களால் இதில் இணைய முடியவில்லை. ( 'தசாவதாரம்' உருவாகிக் கொண்டிருந்த காலத்தில் வேறோரு படத்துக்காக ரஷ்யாவில் இருந்த ஜீவா மரணமடைந்தார்) .
சோதனைகளைக் கடந்த சாதனை
கிருஷ்ணா பாட்டி கதாபாத்திரத்துக்கான மேக்கப்பே தனக்கு மிகவும் கடினமானதாக இருந்ததாகக் கூறியிருக்கிறார் கமல். அதற்குக் கொடுக்கப்பட்ட செயற்கை கண் தன்னுடைய நிஜக் கண்ணின் பார்வையை மறைக்கும் என்றும், அந்த மேக்கப்பை அணிந்துகொண்டிருக்கும் போது தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் வலியை உணர வேண்டியிருந்தது என்றும் கூறியிருக்கிறார். அனைத்துத் தரப்பு ரசிகர்களின் ஆரவார வரவேற்பைப் பெற்ற பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தின் மேக்கப்பே வெகு எளிதானது என்றும் கூறியிருக்கிறார். அறிவியலாளர் கோவிந்த் (கதாநாயகன்), பூவராகன், ஜார்ஜ் புஷ், சிங்கன் நரஹசி ஆகிய கதாபாத்திரங்களுக்கு வேறொரு தோற்றத்தைத் தேர்ந்தெடுத்திருந்ததாகவும் பல்வேறு காரணங்களுக்காக அவற்றை மாற்ற வேண்டியிருந்ததாகவும் கூறி விடுபட்ட தோற்றங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
படத்தின் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் பணியாற்றிய நிறுவனம் 2 மில்லியன் கூடுதல் கட்டணம் கேட்டது. அதைக் கொடுக்க முடியாததால்தான் படத்தின் இறுதிப் பகுதிகளில் கிராஃபிக்ஸ் எதிர்பார்த்த அளவு இல்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் கமல். மேலும் அப்போது அமெரிக்க இந்தியப் பணத்துக்கு இடையிலான மாற்று விகிதம் மிகக் குறைவாகப் பல வெளிநாட்டுக் கலைஞர்கள் தாம் வழக்கமாகப் பெறுவதைவிட மிகக் குறைவான தொகையே கிடைக்கும் என்பதால் இந்தப் படத்தில் பணியாற்ற வைக்க முடியவில்லை. இப்படிப்பட்ட பட்ஜெட் எல்லைகளைத் தாண்டி இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் ஒரு புதுமையான திட்டத்தில் பங்கேற்பதை ரசித்து உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் பணியாற்றினார்கள்.
கமலின் ஜனநாயகப் பயிற்சி
இறுதியில் தன் நெடிய கட்டுரையை இப்படி முடிக்கிறார் கமல். “சினிமாவே மிகச் சிறந்த ஆசான். நாங்கள் சில பகுதிகளில் தோற்றுத்தான் போனோம். ஆனால், அதை அந்த ஆசான் மன்னித்தார். இந்தப் படத்தை வெற்றி பெறவைத்த பார்வையாளர்களைவிட அதிகமாக மன்னித்தார். இந்தப் படத்தை உருவாக்கும்போது நான் ஜனநாயகத்தைப் பயின்றேன் என்று சொல்லலாம். நான் மட்டுமோ அல்லது ரவிகுமார், ரவிச்சந்திரன், வெஸ்ட்மோர் ஆகியோர் மட்டுமோ அல்ல நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்தே இதைச் சாதித்தோம்”.
தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்
முக்கிய செய்திகள்
சினிமா
51 mins ago
சினிமா
7 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago