இயக்குநர் சேரனால் உந்தப்பட்டேன்: மனம் திறக்கும் 'பிரேமம்' இயக்குநர்

By செய்திப்பிரிவு

சேரன் என்ற இயக்குநரால்தான் நான் உந்தப்பட்டேன் என்று 'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் வெளியானவுடன், 'ஆட்டோகிராஃப்' படத்தின் தழுவல்தான் 'பிரேமம்' என்று கருத்து தெரிவித்தார்கள். இது தொடர்பாக அல்போன்ஸ் புத்திரன் அளித்த பேட்டியில் " 'ஆட்டோகிராஃப்' ஒருவரின் வாழ்க்கைக் கதையைச் சொல்வதுபோல, 'பிரேமம்' படத்தின் தலைப்பைப் போல, காதலைப் பற்றி மட்டுமே" என்று தெரிவித்திருந்தார். மேலும், இயக்குநர் சேரனும் அல்போன்ஸ் புத்திரனைத் தொலைபேசியில் வாழ்த்தியிருந்தார்.

தற்போது கரோனா ஊரடங்கினால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் அல்போன்ஸ் புத்திரன். அதில் ரசிகர் ஒருவர், " 'பிரேமம்' எழுதும்போது 'ஆட்டோகிராஃப்' தாக்கம் இருந்ததா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது:

"நான் 'ஆட்டோகிராஃப்' படத்தை ஒருசில முறை பார்த்திருக்கிறேன். அது பல வருடங்களுக்கு முன், படம் வெளியான சமயத்தில். 'பிரேமம்' எடுக்கும்போது சேரனின் ஆட்டோகிராஃபைப் போல இருக்கக் கூடாது என்றே விரும்பினேன். ஏனென்றால் 'ஆட்டோகிராஃப்' ஒரு அழகான படம் என்று நான் நம்புகிறேன். எனவே அது தொடர்பாக எதையும் தொட்டுவிடக் கூடாது என்று இருந்தேன். சேரன் என்ற இயக்குநரால்தான் நான் உந்தப்பட்டேன். அப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று அவர் அக்கறையுடன் நினைத்ததுதான் எனக்கான பாதிப்பே தவிர அந்தப் படத்தின் பாதிப்பு அல்ல."

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE