யாரையும் காயப்படுத்த நாங்கள் எதையும் செய்யவில்லை: ‘தி ஃபேமிலி மேன் 2’ சர்ச்சை குறித்து மனோஜ் பாஜ்பாய் விளக்கம்

By செய்திப்பிரிவு

‘தி ஃபேமிலி மேன் 2’ சர்ச்சை குறித்து நடிகர் மனோஜ் பாஜ்பாய் விளக்கம் அளித்துள்ளார்.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.

முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது. ஜூன் 3-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் சீசனை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவே இரண்டாவது சீசனையும் இயக்கியுள்ளனர்.

ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவதாக இத்தொடருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் மனோஜ் பாஜ்பாய், சமந்தா ஆகியோரது நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இத்தொடர் குறித்து நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளதாவது:

''நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என ஒரு குழுவாக நாங்கள் ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒவ்வொரு மனிதருடைய நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் மதிக்கிறோம். யாரையும் காயப்படுத்துவதற்காக நாங்கள் எதையும் செய்யவில்லை. முதல் சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி நாங்கள் அரசியல் குறித்துப் பேசவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதற்கே உரிய மனிதத்தன்மையுடன் அணுகுகிறோம்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களுடைய சொந்தக் கதையில் ஹீரோதான். இப்போது இத்தொடர் உங்கள் முன்னால் இருக்கிறது. அது உங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில் நீங்கள் பயந்த அளவுக்கு அது இல்லை என்பதை நீங்கள் எங்கோ ஓரிடத்தில் உணர்கிறீர்கள். அது உங்களைப் பற்றியும் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றியும் மிகவும் மரியாதையான வகையில் அன்புடன் பேசுகிறது''.

இவ்வாறு மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE