'ஜகமே தந்திரம்' படத்தில் புதிய முயற்சிகளுக்கு இடம்: சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

'ஜகமே தந்திரம்' படத்தில் புதிய முயற்சிகளுக்கு இடம் கிடைத்ததாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ’ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

'ஜகமே தந்திரம்' படத்தின் இசை மற்றும் பாடல்கள் குறித்து சந்தோஷ் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"'ஜகமே தந்திரம்' படத்தின் இசைப்பணிகளுக்காக மிகப்பெரிய அளவில் நேரம் கிடைத்தது. உலக அளவில் பயணப்படும் படம் என்பதால் நிறைய மெனக்கிட்டேன். பல இடங்களிலிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த படத்தின் இசை நம் மக்களுக்கு அந்நியமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இந்த படம் ஒரு வகையில் பிரிட்டிஷ் படைப்பென்றே சொல்லலாம். அதிலும் பிரிட்டிஷ் பேண்ட் குழுவினர் மற்றும் இசை கலைஞர்கள், ஸ்காட்டிஷ் இசை கலைஞர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் பல திறமையாளர்களுடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறேன். மதுரை நாட்டுப்புற இசையையும் முயற்சித்திருக்கிறேன்.

'ஜகமே தந்திரம்' படப்பிடிப்பிலும், கலந்து கொண்டேன். அதனால் படத்தில் இசை காட்சிகளில் எப்படிப் பொருந்தும் எது பொருந்தாது என்கிற தெளிவு இருந்தது. இந்த அனுபவமே புதுமையாக இருந்தது. ஒரு கலைஞனாக, பல விதமான புதிய முயற்சிகளுக்கு இப்படத்தில் இடம் கிடைத்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி.

'ரகிட ரகிட' பாடல் முதல்முறையாக எனது ஸ்டூடியோவிற்கு வெளியே பதிவு செய்த பாடல். அந்த பாடலே ஒரு அனுபவத்தின் உணர்வின் வெளிப்பாடு தான். ரசிகர்கள் அந்த அனுபவத்தை உணர வேண்டும் என்று நினைத்தோம். படத்தின் மொத்த குழுவினருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ஜுக்கு நன்றி. இப்படத்தில் அவருடன் இணைந்து நூற்றுக்கணக்கான புதிய முயற்சிகளைச் செய்தேன்.

ஆனால் 'ஜகமே தந்திரம்' படத்திற்கு, காட்சிக்குத் தேவையான மண்ணின் இசையை, படத்தில் கொண்டு வந்துள்ளோம். ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்”

இவ்வாறு சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE