விஸ்வநாதன் ஆனந்த் - ஆமிர் கான் விளையாடும் செஸ் போட்டி: கரோனா நிதி திரட்டல் நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ஆமிர் கானும், முன்னாள் உலக செஸ் சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தும் ஒரு செஸ் போட்டியில் விளையாடவுள்ளனர்.

செக்மேட் கோவிட் என்கிற பெயரில் ஜூன் 13ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் சில திரை பிரபலங்களும் கலந்துகொண்டு ஆனந்துக்கு எதிராக செஸ் ஆடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் குழுவின் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பகிரப்பட்டுள்ளது.

"நீங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த ஒரு தருணம். செஸ் விரும்பியான ஆமிர் கானும், முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தும் ஒரு தோழமை ஆட்டத்தில் மோதவுள்ளனர். தாராளமாக நன்கொடை கொடுத்து இந்த நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்யுங்கள்" என்று இந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கு நிதி தரலாம் என்கிற இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிதி திரட்டல் நிகழ்ச்சி என்று ஒருங்கிணைப்பாளர்கள் இதை வர்ணித்துள்ளனர்.

வரும் ஒவ்வொரு பெரிய நிதியும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை எட்டும்போதெல்லாம், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே ஆமிர் கானும், விஸ்வநாதன் ஆனந்தும் ஒரு செஸ் போட்டியில் விளையாடியுள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது,.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE