கார்த்திக் சுப்புராஜின் மிகப்பெரிய ரசிகன் நான்: ஜோஜு

By செய்திப்பிரிவு

நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மிகப்பெரிய ரசிகன் என்று நடிகர் ஜோஜு தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ’ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலமாக தமிழில் நடிகராக அறிமுகமாகிறார் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஜோஜு. கேங்ஸ்டர் சிவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

'ஜகமே தந்திரம்' படம் குறித்து ஜோஜு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மிகப்பெரிய ரசிகன். 'பீட்சா' படம் பார்த்து விட்டு அப்போதே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை. மலையாளத்தில் பிரபலமாகத் தொடங்கிய பிறகு தமிழிலும் வாய்ப்புகள் வரத்தொடங்கின.

இறுதியாக இப்படத்தின் எடிட்டர் டிமல் டென்னிஸ் மற்றும் விவேக் ஹர்ஷன் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை சந்தித்தேன். இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்தார் கார்த்திக். படத்தில் மிகப்பெரிய பாத்திரம் என்பதால் என்னிடம் ஒரு காட்சியை விவரித்து, நடித்துக் காட்டச் சொன்னார். எனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில், நான் அக்காட்சியை நடித்து காட்டினேன். ஆனால் அவர் என்னைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

படத்தில் என் எதிர்பாத்திரமாக நடிப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ என்பது எனக்குத் தெரியும். நான் நேரில் சந்தித்த முதல் ஹாலிவுட் நடிகர் அவர்தான். வாழ்க்கை தரும் ஆச்சரியங்கள் பெரும் சந்தோஷமாக இருக்கிறது. நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ அவர்களுடன் நடிப்பது மிகப்பெரும் பெருமை"

இவ்வாறு ஜோஜு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE