நாடு முழுவதும் 16 ஆக்சிஜன் ஆலைகள்: சோனு சூட் திட்டம்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 16 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க நடிகர் சோனு சூட் திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா நெருக்கடியால் சொந்த ஊர் திரும்ப முடியாத ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சேர பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவினார். இது தவிர வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் இந்தியா திரும்ப தனி விமானம், வேலைவாய்ப்பு, மொபைல் டவர் இல்லாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு மொபைல் டவர் என எண்ணற்ற உதவிகளைச் செய்தார்.

அதேபோல அவரது உதவிகள் இந்த ஆண்டும் தொடர்கின்றன. சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவரை நாக்பூரில் இருந்து ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர உதவினார். மேலும், ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் கரோனா நோயாளிகளுக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் க்ரிப்டோ ரிலீஃப் என்ற நிறுவனத்துடன் இணைந்து நாட்டில் உள்ள 16 மாநிலங்களில் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ சோனு சூட் திட்டமிட்டுள்ளார். ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படவுள்ளன.

இதுகுறித்து சோனு சூட் கூறியுள்ளதாவது:

''கடந்த சில மாதங்களாக நாம சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை ஆக்சிஜன் பற்றாக்குறை. இந்த ஆக்சிஜன் பிரச்சினையை அதன் வேரிலிருந்து அகற்ற வேண்டும் என்று நானும் என்னுடைய குழுவினரும் நினைத்தோம். எனவே எங்களால் முடிந்த பல இடங்களில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு அருகில் இந்த ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும். இந்த ஆலைகளை அமைப்பதன் மூலம் ஆக்சிஜன் போன்ற ஒரு அடிப்படை தேவை கிடைக்காமல் எந்த ஒரு தனி மனிதனும் இறக்கக் கூடாது என்பதே எங்களின் இலக்கு. இது ஆக்சிஜன் பிரச்சினையை முற்றிலுமாகத் தீர்க்கும்''.

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE