மக்கள் பெரிய மனதுடன் தானம் தர முன்வர வேண்டும்: ராஷி கண்ணா

கரோனா நெருக்கடி, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முடிந்தவர்கள் மனமுவந்து தானம் தர முன்வர வேண்டும் என்று நடிகை ராஷி கண்ணா கோரியுள்ளார்.

ஊரடங்கால் பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தனித்தனியாகவோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்தோ நிதி திரட்டி உதவி வருகின்றனர்.

நடிகை ராஷி கண்ணா ரோடி பேங் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடனும், இன்னும் சில தன்னார்வலர்களுடனும் சேர்ந்து முதியோர் இல்லங்களுக்கு உதவி வருகிறார். மேலும், ஊரடங்கால் உணவு கிடைக்காமல் பசியில் இருக்கும் விலங்குகளுக்கும் உணவளித்து வருகிறார்.

இது தவிர, பி தி மிராக்கிள் என்கிற முன்னெடுப்பைத் தொடங்கி, அதன் மூலம் வறியவர்களுக்கு உதவி வருகிறார். #BeTheMiracle என்கிற ஹேஷ்டேகை வைத்துப் பதிவிட்டுள்ள ராஷி கண்ணா, "சமூகத்தில் இப்போது பல குடும்பங்கள் கஷ்டப்பட்டு வருகின்றன. அதில் சிலர் பட்டினியின் விளிம்பில் இருக்கின்றனர். மக்கள் பெரிய மனதுடன் முன்வந்து உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஒவ்வொருவரின் உதவியுமே முக்கியம். மிகப்பெரிய தொகையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம். ஒன்றாகச் சேர்ந்துதான் கடினமான சூழலைக் கடந்து வரமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

இந்தத் தொற்றுக் காலத்தில் மக்கள் அவதிப்படும் உண்மையான கள நிலவரத்தைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவவே இந்த முன்னெடுப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE