சீன மொழியிலும் ரீமேக் ஆகிறது த்ரிஷ்யம் 2

By செய்திப்பிரிவு

’த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் சீன மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

மோகன்லால், மீனா நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். விறுவிறு திரைக்கதையும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பல்வேறு இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது. இதைத் தவிர சீன மொழியிலும் இந்தப் படம் அதிகாரபூர்வமாக ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் சாதனையும் படைத்தது.

தற்போது ’த்ரிஷ்யம் 2’வுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் ரீமேக் உரிமையையும் சீனத் தயாரிப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இன்னும் சில மாதங்களில் படத்தின் வேலைகள் தொடங்கி அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிகிறது.

ஆனால் அசல் 'த்ரிஷ்யம்' கதையின் முடிவில், நாயகனும் அவரது குடும்பமும் செய்த குற்றத்திலிருந்து தப்பிப்பது போலக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். மேலும் நாயகன், காவல் நிலையக் கட்டிடத்தின் கீழ் சடலத்தை மறைத்து வைத்திருப்பதும் தெரியவரும். புத்திசாலித்தனமான திரைக்கதையோடு சேர்ந்து இந்த இறுதிக் காட்சிகள்தான் இந்தப் படத்தின் உச்சமாகப் பார்க்கப்பட்டது. அதே நேரம் சீன மொழி ரீமேக்கில், இறுதியில், நாயகன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைவது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்துக்குச் சீனத்துத் தணிக்கை விதிகளே காரணமாகக் கூறப்பட்டது. இறுதிக்காட்சி இப்படி மாறியிருப்பதால் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே நடித்தாலும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்றும், இது நேரடியாக முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. 'ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்ட் 2' என்ற பெயரில் உருவாகும் இந்த ரீமேக்கிலும், சீனத் தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு மாற்றங்கள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE