இணையத்தில் வைரலான மீம்கள்: பவித்ரா லட்சுமி விளக்கம்

By செய்திப்பிரிவு

போலியான ட்விட்டர் பதிவின் மூலம் இணையத்தில் வைரலான மீம்களுக்கு பவித்ரா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

மாடலிங், நடிப்பு என கவனம் செலுத்தி வருபவர் பவித்ரா லட்சுமி, விஜய் டிவியில் பெரும் வரவேற்பு பெற்ற 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார். அதன் மூலம் பிரபலமானவர், தற்போது சதீஷ் நாயகனாக நடித்துவரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவருடைய போட்டோ ஷூட்கள் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம். சமீபத்தில் சமந்தா போன்று இவர் செய்திருந்த போட்டோ ஷூட்டை சமந்தா பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 7-ம் தேதி பவித்ரா லட்சுமி என்ற பெயர் கொண்ட ட்விட்டர் கணக்கிலிருந்து "என்னைத் தூக்குங்கள்" என்ற தலைப்பில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.

அந்தப் புகைப்படத்தை வைத்து பல்வேறு மீம்களை உருவாக்கினார்கள் நெட்டிசன்கள். இவை அனைத்துமே இணையத்தில் ட்ரெண்டாகத் தொடங்கின. இந்த ட்விட்டர் பதிவு குறித்தும், மீம்கள் குறித்து பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

"அத்தனை மீம்களையும் பார்த்துக் காலையிலிருந்து வயிறு வலிக்கச் சிரித்து வருகிறேன். ‘நாம் போடாத வார்த்தைகளுக்கு என்னை ஏன் கிண்டல் பண்றீங்க’ என்று என் மனதில் ஓடியது. தெய்வமே, அது ஒரு போலிக் கணக்கிலிருந்து பகிரப்பட்ட போலியான வார்த்தைகள். நான் பாவம். ஆனால் மீம்களைப் பார்த்துச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மக்களே! எனது ஒரே ட்விட்டர் கணக்கு இதுதான் (https://twitter.com/itspavitralaksh). நான் பகிரும் தகவல்களைப் பார்க்க இதில் தொடருங்கள். போலிக் கணக்குகளில் பதிவிடும் எதற்கும் நான் பொறுப்பாக முடியாது".

இவ்வாறு பவித்ரா லட்சுமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE