ஓடிடி பார்வை: ஸ்காம் 1992

By முகமது ஹுசைன்

2020ஆம் ஆண்டு ‘சோனி லிவ்’ தளத்தில் வெளியான இந்தத் தொடரை, இந்தியாவின் தலைசிறந்த 10 தொடர்களில் ஒன்றாக ஐ.எம்.டி.பி. வரிசைப்படுத்தியுள்ளது. 90’களில் பேசுபொருளாக இருந்த ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கை வரலாறே இந்தத் தொடர். பொதுவாக ஒரு வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பது சவாலானது. அதுவும் அதைத் தொடராக எடுப்பது என்பது சவாலின் உச்சம்.

இந்த உச்சத்தை, ஆவணப்படத்தின் சாயல் துளியுமின்றி, இந்தத் தொடர் வெற்றிகரமாகத் தொட்டிருப்பதற்கு இயக்குநரின் அசாத்திய திறன் மட்டுமல்ல; ‘பிக் புல்’ என்றழைக்கப்பட்ட ஹர்ஷத் மேத்தாவின் அபரிமிதமான ஏற்றமும் வீழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையும் ஒரு காரணம்.

இந்தியப் பங்குச் சந்தை வணிகத்தைப் பொறுத்தவரை, ஹர்ஷத் மேத்தாவுக்கு முன், பின் என்று பிரிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஹர்ஷத் மேத்தா. சட்டத்தின் ஒட்டைகளை இலைமறை காயாகப் பயன்படுத்தி, பெரும் பணம் ஈட்டிய பன்னாட்டு நிறுவனங்களைப் போலல்லாமல்,சட்டத்தின் ஒட்டைகளை ஹர்ஷத் மேத்தா வெளிப்படையாகப் பயன்படுத்தினார். இணைய வசதியும், கூகுள் அறிவும் இல்லாத 90’களில், பங்குச் சந்தை வணிகத்தில் இவர் பெற்ற அசுர வெற்றி இன்றைக்கும் பெரும் புதிரே. இவரால் பல நிறுவனங்கள் பெரும் பணம் ஈட்டின, பலர் திடீர் பணக்காரர்கள் ஆனார்கள். பலர் இவரின் பேச்சைக் கேட்டு வாழ்க்கையையும் தொலைத்தனர்.

எது எப்படியோ, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து அயராது உழைத்து, படிப்படியாக முன்னேறி, செல்வந்தர்கள் மட்டும் பங்கேற்ற பங்கு வணிகத்தில் ஈடுபட்டு, அதில் அவர்களை மிஞ்சி, ஆட்டத்தின் போக்கை மாற்றி, வெற்றியின் உச்சம் தொட்ட அதே வேகத்தில் தோல்வியின் அதலபாதாளத்தில் வீழ்ந்து மடிந்த ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையே ஒரு விறுவிறுப்பான திரைக்கதைதான்.

அதை எந்த சமரசமுமின்றி, உண்மைக்கு வெகு அருகிலிருந்து, உள்ளது உள்ளபடியே பதிவுசெய்வதில் தென்படும் முனைப்பும் நேர்த்தியும் இயக்குநரின் திரை ஆளுமைக்குச் சான்று. நாயகனை நல்லவனாகக் காட்ட முற்படும் வணிக சினிமாவின் எந்த நிர்பந்தங்களுக்கும் ஆட்படாமல், ஹர்ஷத் மேத்தாவை அவருடைய அனைத்துத் தவறுகளுடன் விவரித்திருக்கும் விதம் பாராட்டுதலுக்கு உரியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE