'சிட்டிசன்' வெளியாகி 20 ஆண்டுகள்: அஜித்தின் திரை வாழ்வில் முக்கியமான வெற்றிப் படம் 

By ச.கோபாலகிருஷ்ணன்

ரசிகர்களால் 'தல' என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அஜித் குமாரின் 30 ஆண்டுகளை நெருங்கும் திரை வாழ்வில், மிக முக்கியமான வெற்றித் திரைப்படங்களில் ஒன்றான 'சிட்டிசன்' வெளியாகி இன்று 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன (ஜூன் 8, 2001).

'அமராவதி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அஜித் அழகும் துறுதுறுப்பும் மிக்க இளம் ஆண் என்னும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்று தொடக்கத்தில் 'ஆசை' , 'வான்மதி', 'காதல் கோட்டை' போன்ற காதல் படங்களிலும் பின்னர் 'அமர்க்களம்', 'தீனா' போன்ற ஆக்‌ஷன் படங்களிலும் நடித்து ஒரு முதன்மை நட்சத்திரமாக உயர்ந்திருந்தார். 'வாலி', 'முகவரி', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என வணிக சினிமாவின் சட்டகத்துக்குள் சற்றே மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்களில் நடித்தும் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் புகழ்பெற்றிருந்தார்.

இந்தச் சூழலில் 2001 பொங்கலுக்கு வெளியான 'தீனா' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்று பெரிதும் மதிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துநிற்கும் ஏ.ஆர்.முருகதாஸின் அறிமுகப் படமான 'தீனா', அஜித்தை ஒரு தவிர்க்க முடியாத ஆக்‌ஷன் நாயகனாக நிலைநிறுத்தியதில் இந்தப் படத்துக்கும் அதன் வணிக வெற்றிக்கும் மிகப் பெரிய பங்குண்டு. அதோடு அஜித்தை அழைப்பதற்கும் ரசிகர்களும் அவர் மீது மதிப்புகொண்ட திரையுலகினரும் பயன்படுத்தும் 'தல' என்னும் செல்லப் பெயர் இந்தப் படத்திலிருந்துதான் கிடைத்தது.

அதே ஆண்டில் ஆறு மாதங்கள் கழித்து வெளியான 'சிட்டிசன்', 'தீனா' மூலம அஜித்துக்கு கிடைத்திருந்த ஆக்‌ஷன் நாயகன் இமேஜை வலுப்படுத்தியது. அதோடு ஒரு நாயக நடிகராக அவருடைய பல்வேறு திறன்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும் அதன் கதைக்களம் அமைந்திருந்தது. இதுபோன்ற காரணிகளின் மூலம் அஜித்தின் நட்சத்திர மதிப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதாக அமைந்தது. அந்த வகையில் அஜித்தின் திரைவாழ்வில் 'தீனா' ஒரு மைல்கல் என்றால் அதற்கான கச்சிதமான தொடர்ச்சியாக அமைந்த படம் 'சிட்டிசன்'.

'சிட்டிசன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சரவண சுப்பையா. எழுத்தாளர் பாலகுமாரனும், சரவண சுப்பையாவும் இணைந்து வசனங்களை எழுதினர். அதற்கு முந்தைய ஆண்டு வெளியாகியிருந்த கமல்ஹாசனின் பிரம்மாண்ட வரலாற்றுப் படமான 'ஹே ராம்' படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக மையக் கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமாகியிருந்த வசுந்தரா தாஸ் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியானார். பாடகியுமான வசுந்தரா தாஸ் இரண்டு டூயட் பாடல்களையும் பாடியிருந்தார். இன்று பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி ஒளிப்பதிவாளராகத் திகழும் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்தார்.

அஜித்தின் தொடக்க ஆண்டுகளில் மறக்க முடியாத பல வெற்றிப் பாடல்களை அளித்தவரான தேவா, 'சிட்டிசன்' படத்துக்கு இசையமைத்தார். 'மேற்கே விதைத்த சூரியனே', 'பூக்காரா பூக்காரா', 'ஐ லைக் யூ' என பாடல்கள் அனைத்தும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. அதோடு அஜித் இந்தப் படத்தில் பலவிதமான கெட்டப்களில் தோன்றவிருக்கிறார் என்னும் தகவல்களும் படத்தின் போஸ்டர்களும் 'தல' ரசிகர்களை ஆவலின் உச்சத்துக்குக் கொண்டுசென்றன. பொதுவான திரைப்பட ரசிகர்களும் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டினர். அதுவரை கமல்ஹாசன், விக்ரம் போன்ற நடிகர்கள் சிலரே முயன்றுவந்த கெட்டப், மேக்கப் மெனக்கெடல்களுக்கு அஜித்தும் தன்னை ஆட்படுத்திக்கொண்டது படத்துக்கான எதிர்பார்ப்பைப் பன்மடங்கு அதிகரித்தது.

படம் வெளியானதும் ரசிகர்களுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. முதலில் படத்தின் நீளம் 181 நிமிடங்கள். அதுவரை வெளியான எந்த அஜித் படமும் அவ்வளவு பெரியதாக இல்லை. மூன்று மணி நேரத்துக்கு நீளும் படங்கள் என்பவை தமிழில் அரிதினும் அரிதாகிவிட்டிருந்த காலகட்டம் அது. ஆனால் 'சிட்டிசன்' படம் அவ்வளவு நீளம் இருப்பதற்கான நியாயம் புதுமையான அதன் கதைக்களத்தில் இருந்தது.

அரசியல் பதவியில் இருப்போர் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் சுயநலத்தாலும் ஊழலாலும் ஒரு கிராமமே அழிந்துவிட, அங்கிருந்து தப்பிக்க நேர்ந்த ஒற்றை மனிதன் தன் கிராமத்தினரின் அழிவுக்காகப் பழிதீர்ப்பதே படத்தின் ஒற்றை வரி. ஒரு கிராமமே தமிழக வரைபடத்திலிருந்து அழிந்துவிடுகிறது என்னும் கற்பனையே பலரை ஆச்சரியப்படுத்தியது. அதோடு நாயகனான அஜித் நடுத்தர வயது போக்குவரத்துக் காவல் அதிகாரி, உடல் மெலிந்த ஆட்சியர், பருமனான அரசியல்வாதி, முகம் வீங்கி வெளிறிப்போன முதியவர், அப்பாவித்தனம் மிக்க மீனவர் எனக் கடினமான ஒப்பனையுடன் கூடிய பல வகையான கெட்டப்புகளில் தோன்றியதும் அவற்றின் மூலம் அவர் காவல் துறையினரிடமிருந்து தப்பிப்பதாகக் காண்பித்ததும் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியது.

ஒரு கிராமமே அழிக்கப்பட்ட கதையைக் கூறும் ஃப்ளாஷ்பேக் பகுதி மிக உணர்வுபூர்வமாகவும், நாயகனின் பழிவாங்கும் முயற்சிகளில் வெளிப்பட்ட தீவிரத்தையும் வன்முறையையும் பரவலான ஏற்பைப் பெற்றுத் தருவதாகவும் அமைந்திருந்தன. இறுதியில் தான் பழிவாங்க நினைத்த அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளைக் கொன்றுவிடாமல் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாயகன் அவர்களுக்குப் பரிந்துரைக்கும் மரணத்தைவிடக் கொடுமையான தண்டனையும் திரைக்கதையின் தேவைக்குப் பொருத்தமானதாகவும் இதுபோன்ற பழிவாங்கும் கதையில் ஒரு புதுமையான முயற்சியாகவும் கருதப்பட்டது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் 100 நாட்கள் திரையரங்கில் ஓடி சூப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்றது 'சிட்டிசன்'. அஜித்தின் மாஸ் நாயக பிம்பம், மற்றும் அவருடைய கெட்டப் முயற்சிகள் ஏற்படுத்திய சுவாரஸ்யம் ஆகியவற்றைத் தாண்டி அறிமுக இயக்குநர் சரவண சுப்பையாவின் வித்தியாசமான கதையும் மூன்று மணி நேரம் நகர்வதே தெரியாத அளவு சுவாரஸ்யமான திரைக்கதையும் முதன்மையான காரணங்கள்.

பாலகுமாருடனுன் இணைந்து எழுதப்பட்ட அழுத்தமான வசனங்களும் படத்தின் வெற்றிக்கு முதன்மைப் பங்காற்றின. 'நான் தனியாள் இல்ல', 'ஆறு கோடி பேர்ல ஒரு ஆள், நூறு கோடி பேர்ல ஒத்த ஆள்' என்பது போன்ற அஜித்துக்கான பஞ்ச் வசனங்கள் ரசிகர்களைப் பெரும் குதூகலத்தில் ஆழ்த்தின. இறுதி நீதிமன்றக் காட்சியில் அஜித் செந்தமிழில் பேசும் நீண்ட வசனங்களும் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவும். தேவாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் படத்தை ரசிப்பதற்கான காரணங்களை அதிகரித்தன.

இப்படிப் பல காரணங்களால் அஜித்தின் திரை வாழ்வில் 'சிட்டிசன்' முக்கியமான படம். அவருடைய ரசிகர்களால் என்றும் கொண்டாடத்தக்கப் படம். தலைமுறைகளைக் கடந்த பார்வையாளர்களை ரசிக்கவும் வியக்கவும் வைக்கக்கூடிய தமிழ் வணிக சினிமாவாக என்றென்றும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்-சரவண சுப்பையா இணைந்து இன்னொரு பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் பணியாற்ற திட்டமிட்டனர். வசனம் எழுத எழுத்தாளர் சுஜாதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். 'இதிகாசம்' என்று தலைப்பிடப்பட்டிருந்த இந்தப் படம் வரலாற்று நிகழ்வுகளைக் கதைக்களமாகக் கொண்டிருந்தது. ஆனால், ஏனோ இந்தப் படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டுவிட்டது. ஒருவேளை வெளியாகியிருந்தால் 'சிட்டிசன்' போலவே 'இதிகாசம்' படமும் அஜித்தின் திரை வாழ்வில் முக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE