ட்விட்டர் ஸ்பேஸில் சாதனை புரிந்த ஜகமே தந்திரம்

By செய்திப்பிரிவு

ட்விட்டர் ஸ்பேஸில் சாதனை புரிந்துள்ளது 'ஜகமே தந்திரம்' படக்குழு.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. நேற்று (ஜூன் 7) 'ஜகமே தந்திரம்' படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடப்பட்டன. இதனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

இசை வெளியீட்டை முன்னிட்டு, நேற்று இரவு 8:30 மணியளவில் 'ஜகமே தந்திரம்' படத்தின் இசைக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினார்கள். இதனை அலெக்சாண்டர் பாபு தொகுத்து வழங்கினார். இதில் தனுஷும் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த ட்விட்டர் ஸ்பேஸ் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரே சமயத்தில் 17 ஆயிரம் பேர் இந்தக் கலந்துரையாடலைக் கேட்டு மகிழ்ந்தனர். இதற்கு முன்னதாக 'ஆர்மி ஆஃப் டெட்' படக்குழுவினர் கலந்துரையாடலில்தான் அதிகம் பேர் கலந்துகொண்டது சாதனையாக இருந்தது. தற்போது 'ஜகமே தந்திரம்' அதனை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

’ஜகமே தந்திரம்’ படக்குழுவினரின் இந்த சாதனையால் தனுஷ் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE