நடிகர்கள் இணையும் இந்திய தொழில், வர்த்தக சங்கக் கூட்டமைப்பின் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு, கரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளது. இதில் இந்தியாவின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரை நடிகர்கள் இணையவுள்ளனர்.

கரோனாவைத் தோற்கடிப்போம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் இந்தி, பஞ்சாபி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் சிரஞ்சீவி, தமிழில் ஆர்யா, கன்னடத்தில் புனீத் ராஜ்குமார், இந்தியில் அக்‌ஷய் குமார் எனப் பலரும் இதில் இணைந்து பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவுத் தலைவர் சஞ்சய் குப்தா, "நமது மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணிகளுக்கு நன்றி. கரோனா அலை ஓய்ந்து வருவதற்கான ஆரம்பத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் நம்மை, நம் குடும்பங்களை, நம் சமூகத்தை இந்த நோய்த் தொற்றிலிருந்து காக்க நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

எதிர்காலத்துக்காக நாம் தயாராக இருக்க, தொற்றால் நமது வாழ்வுக்கும், வாழ்வாதாரத்துக்கும் குறைந்த பாதிப்பே ஏற்பட வேண்டும் என்பதற்காக, தடுப்பூசி போடுவதை அதிகரித்து, இன்னும் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டிய முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.

கரோனா வராமல் தடுக்க, அதற்கேற்ற வாழ்வு முறையைப் பின்பற்ற அத்தனை இந்தியர்களுக்கும் சரியான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த இப்போது நாம் அனைவரும் ஒன்றாக வரவேண்டிய அவசியம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE