வீட்டிலும் ஆக்‌ஷன் சொன்ன ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்: மகன் ஸாயர் பகிர்வு

By ஐஏஎன்எஸ்

இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வீட்டிலும் எப்படி ஆக்‌ஷன் சொல்லி, தன்னை ஒழுங்காக எழச் செய்தார் என்று அவரது மகன் ஸாயர் ஸ்பீல்பெர்க் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ‘ஜூராசிக் பார்க்’, ‘ஜாஸ்’, ‘இண்டியானா ஜோன்ஸ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களை ஈர்த்தவர். இரண்டு முறை சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர்.

இறுதியாக ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ரெடி ஒன் ப்ளேயர்’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 1961ஆம் ஆண்டு வெளியான ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ என்ற படத்தை ஸ்பீல்பெர்க் ரீமேக் செய்து வருகிறார்.

ஸ்பீல்பெர்க்குக்கு இரண்டு முறை திருமணம் ஆகியுள்ளது. அவருக்கு 7 குழந்தைகள். இதில் இரண்டு பேர் அவரால் தத்தெடுக்கப்பட்டவர்கள். ஸ்பீல்பெர்க்கின் மகன்களில் ஒருவரான ஸாயர் ஸ்பீல்பெர்க் நடிகராகவும், இயக்குநராகவும் ஹாலிவுட்டில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் நடிகை ட்ரூ பேரிமோரின் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஸாயர், தனது பதின்ம வயதில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார்.

"எனது பதின்ம வயதில் நேரத்துக்கு எழுந்து பள்ளி செல்வதில் எனக்குச் சிக்கல் இருந்தது. ஒருநாள் என் தந்தை என்னிடம் வந்தார். 'சரி இங்கு பார், நான் ஒரு இயக்குநர், நீ ஒரு நடிகன். தினமும் நான் உன் அறைக்குள் வந்து ஆக்‌ஷன் என்று கத்துவேன்.

நீ எழுந்து, பல் தேய்த்து, காலை உணவைச் சாப்பிடச் செல்ல வேண்டும்' என்றார். அவர் சொன்னபடியே என் அறைக்கு வந்து ’ஆக்‌ஷன் ’என்பார். நான் எழுந்து, பல் தேய்த்து சாப்பிடச் செல்வேன். இது நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்ல எனக்குப் பெரிய உதவியாக இருந்தது. எனவே அவரது இயக்கும் திறன் திரைப்படங்களிலும் சரி, வீட்டிலும் சரி, நன்றாக வேலை செய்துள்ளது" என்று ஸாயர் பகிர்ந்துள்ளார்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1982ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஈ.டி. எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல்’. ஏலியன் படங்களுக்கு முன்னோடியான இப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது. அந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் நான்கு விருதுகளைக் குவித்தது. இப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக ட்ரூ பேரிமோர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE